மீண்டும் மிசேச்சத்தனமான தாக்குதலை தொடங்கிய ரஷ்யா! மேற்கத்திய நாடுகள் எடுத்த நடவடிக்கை
உக்ரைனின் மரியுபோல் மற்றும் கார்கிவ் நகரங்களில் ரஷ்ய பீரங்கிகள் நேற்றும் மிலேச்சத்தனமான உ தாக்குதலில் ஈடுபட்ட நிலையில், மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது மேலும் தடைகளை விதிக்க தயாராகி வருகின்றன.
இந்நிலையில் உக்ரைனின் “நகரில் மனிதாபிமான நிலை மிகமோசமடைந்துள்ளது” என்று பிரிட்டன் இராணுவ புலனாய்வுத் துறை நேற்று தெரிவித்ததுடன், “மின்னொளி, தொடர்பாடல், மருத்துவம், சூடேற்றும் வசதி அல்லது குடிநீர் இன்றி கிட்டத்தட்ட 160,000 குடியிருப்பாளர்கள் சிக்கியுள்ளனர்.
ரஷ்யப் படை மனிதாபிமான உதவிகள் செல்வதை தடுத்து தற்காப்பாளர்களை சரணடைய அழுத்தம் கொடுத்து வருகிறதாகவும் கூறியுள்ளது. அதேசமயம் 11 மனிதாபிமான வழிகள் ஊடாக சிக்கி இருக்கும் பொதுமக்களை வெளியேற்றுவதற்கு நிர்வாகம் முயற்சிப்பதாக உக்ரைன் பிரதி பிரதமர் இரினா வெரெஷ்சுக் தெரிவித்துள்ளார்.
மரியுபோலில் இருக்கும் மக்கள் சொந்த வாகனங்களில் அங்கிருந்து வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ரஷ்ய படை கடந்த வாரம் தலைநகர் கியேவின் புறநகர் பகுதியில் இருந்து பின்வாங்கிய நிலையில் உக்ரைனின் தெற்கு மற்றும் கிழக்கில் தமது தாக்குதல்களை அதிகரித்துள்ளது. இந்நிலையில் இரண்டாவது மிகப்பெரிய நகரான நாட்டின் வடகிழக்கில் உள்ள கார்கிவ் தாக்குதலுக்கு இலக்காகி இருப்பதாக உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது.
கிழக்கு பிராந்தியமான லுஹான்ஸ்கில் இருக்கும் குடியிருப்பாளர்களை அங்கிருந்து வெளியேறும்படி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இந்தப் பகுதி ரஷ்யாவின் புதிய தாக்குதலுக்கு இலக்காகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறான நிலையில் மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது கூடுதல் பொருளாதாரத் தடைகளை அறிவிக்கவுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
புச்சாவில் நடந்த படுகொலைகள் குறித்து ரஷ்யா மீது குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், இந்த கூடுதல் பொருளாதார தடைகள் விதிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியமும் போர்க்குற்றங்களுக்காக ரஷ்யா மீது புதிய தடைகளை அறிவிக்கத் திட்டமிடுகிறது.
நிலக்கரி இறக்குமதியைத் தடைசெய்வது, 22 பில்லியன் டொலர் வர்த்தகத்தைத் தடுப்பது போன்றவை ஆராயப்படுகின்றன. அதேபோன்று ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதியைத் தடைசெய்யவும் ஐரோப்பிய ஒன்றியம் திட்டமிடுகிறது. இதேவேளை அதிகமான மேற்கத்திய நாடுகள் ரஷ்யத் தூதரக அதிகாரிகளை வெளியேற்றி வருகின்றன.
இத்தாலி 30 ரஷ்ய இராஜதந்திரிகளைப் பாதுகாப்பைக் காரணங்காட்டி அந்நாட்டிலிருந்து வெளியேற்றியது. டென்மார்க் 15 ரஷ்ய இராஜதந்திரிகளை வெளியேற்றுவதாகக் கூறியது. ஸ்பெயின் 25 பேரையும் ஸ்வீடன் மூவரையும் வெளியேற்ற முடிவு செய்துள்ளன. ரஷ்யாவின் புச்சா நகரப் படுகொலையைத் தொடர்ந்து அந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இந்நிலையில் ரஷ்யா புச்சா நகரச் சம்பவத்தை நிராகரித்துள்ளது. அது தன் பெயரைக் கெடுக்க வெளியிடப்படும் பொய்யான தகவல் என்று ரஷ்யா கூறுகிறது.
உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) ஐ.நா பாதுகாப்பு சபையில் கடந்த செவ்வாயன்று உரையாற்றிய போது தமது நாட்டின் மீது மேற்கொள்ளப்பட்டுவரும் குற்றங்களுக்கு ரஷ்யப் படை பொறுப்பேற்க வேண்டும் என்று அவர் கூறினார்.
பெப்ரவரி மாதம் 24ஆம் திகதி உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பை ஆரம்பித்த பின்னர் முதன்முறையாக செலென்ஸ்கி பாதுகாப்பு சபையில் பேசி இருந்தார்.
இதன்போது அவர் , தலைநகர் கியேவுக்கு அருகே உள்ள புச்சா சிறுநகரில் பொது மக்கள் கொல்லப்பட்ட விதத்தையும் அவர் கடுமையாகச் சாடியதுடன், ஆயிரக்கணக்கான உக்ரைனியர்கள் ரஷ்யாவுக்கு நாடு கடத்தப்பட்டிருப்பதாகவும் அவர் (Volodymyr Zelenskyy) குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது