உக்ரைன் மீது மீண்டும் எவுகணைக் தாக்குதல் நடத்திய ரஷ்யா! 10 பேர் பலி
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பெப்ரவரி 24-ம் திகதி முதல் தாக்குதலை தொடங்கியது. அன்று முதல் தற்போது வரை அங்கு இடைவிடாமல் போர் நடைபெற்று வருகிறது.
இரு தரப்பிலும் பலத்த உயிர்சேதம் ஏற்பட்டுள்ள போதிலும், ரஷ்யாவின் தாக்குதல்களுக்கு உக்ரைன் ராணுவம் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது.
இதனிடையே உக்ரைனின் தெற்கு பகுதியில் உள்ள பெரும்பாலான நகரங்களை ரஷ்ய துருப்புக்கள் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது.
தற்போது கிழக்கு உக்ரைனில் கடுமையான போர் நடந்து வருகிறது. கடந்த வாரம் லிசிசான்ஸ்க் நகரத்தை ரஷ்ய துருப்புக்கள் கைப்பற்றியது.
மேலும் ரஷ்ய துருப்புக்கள் தனது தாக்குதலை தொடர்ந்து வருகிறது.
இந்த நிலையில் கிழக்கு உக்ரைனில் உள்ள சாசிவ்யார் என்ற நகரத்தில் ரஷ்ய துருப்புக்கள் நேற்று நடத்திய ஏவுகணை தாக்குதலில் 5 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று பலத்த சேதமடைந்தது.
இந்த தாக்குதலால் கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கி 10 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் 30-க்கும் மேற்பட்டவர்கள் இடிபாடுகளில் சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது.
அவர்களை மீட்கும் பணியில் உக்ரைன் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.