ரஷ்ய எண்ணெய் தடைகள் தளர்வு ; தென் கொரியாவுக்கு புதிய வாய்ப்பு
உலகளாவிய எரிசக்தி நெருக்கடி தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்கா விதித்துள்ள தடைகளைத் தளர்த்தியதன் மூலம் ரஷ்ய எரிசக்தி தயாரிப்புகளை இறக்குமதி செய்யத் தமக்கு அனுமதி கிடைத்துள்ளதாகத் தென் கொரியா உறுதிப்படுத்தியுள்ளது.
ரஷ்ய கச்சா எண்ணெய் மற்றும் பெற்றோலிய தயாரிப்புகள் மீதான தடைகளைத் தற்காலிகமாகத் தளர்த்துவதாக அமெரிக்கா ஏற்கனவே அறிவித்திருந்ததாகத் தென் கொரிய வர்த்தக, தொழில் மற்றும் வளங்கள் அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், அந்த செயல்முறையில் நிலவிய நிச்சயமற்ற தன்மைகள் மற்றும் சிக்கல்கள் காரணமாக, சியோல் நிர்வாகம் வொஷிங்டனுடன் மேலதிக பேச்சுவார்த்தைகளை நடத்தி விடயங்களைத் தெளிவுபடுத்திக் கொண்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

அந்தப் பேச்சுவார்த்தைகளின்படி, அமெரிக்க டொலர் அல்லாத வேறு நாணய அலகுகளில் பணம் செலுத்துவதன் மூலம் ரஷ்ய எரிசக்தி தயாரிப்புகளைக் கொள்வனவு செய்யத் தென் கொரியாவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
இதற்கு "இரண்டாம் நிலைத் தடைகள்" பொருந்தாது என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தற்போதைய போர்ச் சூழலில் உலகச் சந்தையில் எண்ணெய் விலையைக் கட்டுப்படுத்துவதற்காக ட்ரம்ப் நிர்வாகம் பல்வேறு தந்திரோபாயங்களைப் பயன்படுத்தி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, இந்த மாத தொடக்கத்தில் பல மில்லியன் ரஷ்ய எண்ணெய் பீப்பாய்களுக்குத் தடைகளிலிருந்து விலக்கு அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.