வளைகுடா நாடுகளுக்கு நாடுகடத்தும் நடவடிக்கையை நிறுத்தியது கனடா
கனடா , ஈரானில் நடைபெற்று வரும் போர் மற்றும் வளைகுடா பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழலைக் கருத்தில் கொண்டு, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நான்கு நாடுகளுக்குத் தற்காலிகமாக நாடுகடத்தும் நடவடிக்கையை (Removals) நிறுத்தி வைப்பதாக கனடா எல்லை சேவைகள் முகவர் நிறுவனம் அறிவித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகம் (UAE), குவைத், பஹ்ரைன் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளுக்கான நாடு கடத்தல் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
இந்தப் பகுதிகளில் நிலவும் நிலையற்ற மற்றும் கணிக்க முடியாத போர்ச் சூழல், அங்குள்ள ஒட்டுமொத்த பொதுமக்களுக்கும் பெரும் ஆபத்தை விளைவிக்கும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இது நிர்வாக ரீதியான நாடுகடத்தல் ஒத்திவைப்பு என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஒரு நாடு வன்முறை அல்லது பாதுகாப்பற்ற சூழலில் இருக்கும்போது கனடா இத்தகைய முடிவை எடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த மாதம் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, அமெரிக்க ராணுவத் தளங்கள் மற்றும் வளைகுடா நாடுகளின் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
குறிப்பாக, மார்ச் 16 அன்று துபாயில் உள்ள எரிபொருள் தொட்டி மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல் காரணமாக விமான நிலையச் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.