கனடிய சிறையில் கைதி மீது தாக்குதல் – ஒருவர் உயிரிழப்பு
கனடாவின் கியூபெக் நகரம் அருகிலுள்ள டொன்னகோனா சிறையில் இடம்பெற்ற தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கியூபெக் மாகாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
செவ்வாய்க்கிழமை மாலை சுமார் 7.30 மணியளவில், இருபதுகளில் உள்ள இரண்டு கைதிகள், மற்ற கைதிகளால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதலுக்குப் பின்னர் இருவரும் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

காயமடைந்த இருவரில் ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தபோது உயிரிழந்தார் என மாகாண பொலிஸ்பேச்சாளர் பியாட்ரிஸ் டோர்சைன்வில் தெரிவித்துள்ளார்.
மற்றொருவர் காயமடைந்திருந்தாலும், அவரது உயிருக்கு ஆபத்து இல்லை என கூறப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 2ஆம் திகதி 26 வயதான கைதி ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, ஒரு மாதத்திற்குள் இந்த அதிகபட்ச பாதுகாப்பு சிறையில் இடம்பெறும் இரண்டாவது கொலை இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை கியூபெக் மாகாண பொலிஸின் குற்றப்பிரிவு மேற்கொண்டு வருகிறது.