சுட்டுவீழ்த்தப்பட்ட MH17 விமானம் ; ஐ.நா வின் தீர்ப்பை நிராகரித்த ரஷ்யா!
மலேசியா ஏர்லைன்ஸின் MH17 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு ரஷ்யாதான் காரணம் என்று ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் விமானப் போக்குவரத்து மன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.
விமானத்தில் இருந்த 298 பயணிகளும் சிப்பந்திகளும் மாண்டனர்.
எத்தகைய இழப்பீடு வழங்கப்படவேண்டும் என்பதை அனைத்துலகச் சிவில் விமானப் போக்குவரத்து மன்றம் எதிர்வரும் வாரங்களில் பரிசீலிக்கும்.
உண்மையைக் கண்டுபிடிக்கவும் நீதியை நிலைநாட்டவும் இந்தத் தீர்ப்பு ஒரு முக்கியப் படி என்று டச்சு வெளியுறவு அமைச்சர் தெரிவித்தார்.
2014 ஜூலை 7 ஆம் திகதி நெதர்லந்துத் தலைநகர் ஆம்ஸ்டர்டாமிலிருந்து (Amsterdam) மலேசியத் தலைநகர் கோலாலம்பூருக்குச் சென்று கொண்டிருந்தது மலேசிய விமானம் MH17.
உக்ரேனின் கிழக்குப் பகுதியில் அது சுட்டு வீழ்த்தப்பட்டது.
அப்போது ரஷ்ய ஆதரவிலான பிரிவினைவாதிகள் உக்ரேனியப் படையினருடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். தாக்குதலின் தொடர்பில் 2 ரஷ்ய ஆடவர்கள், ஓர் உக்ரேனிய ஆடவர் ஆகியோர் கொலைக் குற்றவாளிகள் என நெதர்லந்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஆனால் அந்தத் தீர்ப்பை நிராகரித்த ரஷ்யா அதன் குடிமக்களை நாடுகடத்த மறுத்துவிட்டது. 2022ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவும் நெதர்லந்தும் அந்த வழக்கைத் தொடங்கின.