கனடா போரை விரும்பும் நாடு : ரஷ்யா சாடல்
உக்ரைனுடன் இணைந்து ட்ரோன் தயாரிப்பதற்கான கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதற்காகக் கனடாவை ரஷ்யா "போர்ப் பிரியன்" என்று கடுமையாகச் சாடியுள்ளது.
அத்துடன், உக்ரைனுடன் இணைந்து பணியாற்றும் கனடிய நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ முகவரியை பகிரங்கமாக வெளியிடப் போவதாகவும் ரஷ்யா மிரட்டல் விடுத்துள்ளது.
எனினும், ரஷ்யாவின் இத்தகைய மிரட்டல்களுக்குக் கனடா ஒருபோதும் அஞ்சாது என தேசிய பாதுகாப்பு அமைச்சர் டேவிட் மெக்கின்டி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு, கனடா மற்றும் உக்ரைன் நாட்டு ட்ரோன் தயாரிப்பு நிறுவனங்களுக்கு இடையே ஒரு கூட்டாண்மை ஒப்பந்தத்தை ஒட்டாவா அரசு அறிவித்தது.
உக்ரைனின் 'ஏர்லாஜிக்ஸ்' நிறுவனம் மற்றும் கனடாவின் ஒன்டாரியோ மாகாணம் ஹாமில்டன் நகரைத் தளமாகக் கொண்ட 'சென்டினல் ஆர்&டி' ஆகிய நிறுவனங்களுக்கு இடையே இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதன் மூலம் கனடாவில் தயாரிக்கப்படும் அதிநவீன ட்ரோன்கள், உக்ரைன் போர்க்களத்தின் முன்னணிப் பகுதிகளில் பயன்படுத்தப்படவுள்ளன.
மாஸ்கோவில் புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், ரஷ்ய வெளியுறவு அமைச்சின் ஊடகப் பேச்சாளர் மரியா சகாரோவா இந்த ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ள ஒன்டாரியோ நிறுவனத்தின் முகவரியை ரஷ்யா பகிரங்கமாகப் பகிர்வதை உறுதிப்படுத்தினார்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் உக்ரைன் தனது முக்கியமான ராணுவ விநியோகங்களை மூன்றாம் நாடு ஒன்றில் மறைத்து வைக்க முயல்கிறது என குற்றம் சுமத்தியுள்ளார்.
அமைதியை விரும்புவதாகக் கூறிக்கொள்ளும் கனடா, நடைமுறையில் ஒரு "போர்ப் பிரியன்" போல நடந்துகொள்கிறது என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஒட்டாவாவில் உள்ள ரஷ்ய தூதர், இந்த ட்ரோன் ஒப்பந்தத்தின் மூலம் தற்போது நடந்து வரும் மோதலைப் பயன்படுத்தி கனடா லாபம் ஈட்ட முயல்வதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், கனடாவின் இந்த நடவடிக்கையை ரஷ்யா தனது ராணுவ மற்றும் அரசியல் திட்டமிடல்களில் கணக்கில் எடுத்துக்கொள்ளும் எனவும் ரஷ்யத் தரப்பு எச்சரித்துள்ளது.