உக்ரைனில் பேருந்து மீது ரஷ்யா தாக்குதல் ; 33 பேர் பலி, 18 பேர் காயம்
உக்ரைனின் கிழக்குப் பகுதியில் உள்ள கிரமடோர்ஸ்க் நகரில் பயணிகள் பேருந்துகள் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் 33 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 18 பேர் காயமடைந்துள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2022ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா ஆரம்பித்த போர் நான்காவது ஆண்டைக் கடந்து தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.
இந்தப் போரில் இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதுடன், பெருமளவான மக்கள் தமது வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

உக்ரைனுக்கு அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் ஆயுத மற்றும் நிதி உதவிகளை வழங்கி வருகின்றன. மறுபுறம், வடகொரியா ரஷ்யாவுக்கு இராணுவ உதவிகளை வழங்கி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், உக்ரைனின் டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் அமைந்துள்ள கிரமடோர்ஸ்க் நகரில், பயணிகள் பேருந்துகள் சென்றுகொண்டிருந்த வீதியை இலக்குவைத்து ரஷ்யா வழிகாட்டப்பட்ட குண்டுத் தாக்குதலை நடத்தியதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தாக்குதலில் இரண்டு பேருந்துகள் தீப்பற்றியதுடன், அப்பகுதியிலும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
தாக்குதலைத் தொடர்ந்து மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று காயமடைந்தவர்களை மீட்டு வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
தாக்குதல் தொடர்பான புகைப்படங்களையும் உக்ரைன் அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். பேருந்து நிறுத்தம் ஒன்றை இலக்குவைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த பேருந்துகள் தாக்கப்பட்ட சம்பவம் இந்த ஆண்டில் இடம்பெற்ற மிக மோசமான தாக்குதல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம், ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தபோதிலும், இரு நாடுகளுக்கும் இடையே இதுவரை நிரந்தரத் தீர்வு எட்டப்படவில்லை.
போர் தொடர்ந்து நீடிக்கும் நிலையில், பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தியுள்ளன.