உக்ரைனில் நள்ளிரவில் ரஷ்யா நடத்திய தாக்குதல் ; 8 பேர் உயிரிழப்பு
உக்ரைனின் பல்வேறு பகுதிகளைக் குறிவைத்து ரஷ்யா நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 60 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போர் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல்களில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்தப் போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுதங்கள் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றன.
அதேவேளை, இந்தியா, சீனா உள்ளிட்ட பல நாடுகள் பேச்சுவார்த்தைகள் மூலம் போரை முடிவுக்குக் கொண்டுவர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
இருப்பினும், இரு நாடுகளுக்கும் இடையிலான போர் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.
இந்நிலையில், உக்ரைனின் கார்கிவ், ரமட்ரோஸ், வலொன் மற்றும் ரிவ்னி உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள மின்கட்டமைப்புகள் மற்றும் வணிக வளாகங்களை இலக்காகக் கொண்டு நேற்று இரவு ரஷ்யா ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல்களில் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், 60 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதல்களால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்படும் மீட்பு நடவடிக்கைகள் தொடர்பான மேலதிக விபரங்கள் வெளியாகி வருகின்றன.