உக்ரைனில் ரஷ்ய டிரோன் தாக்குதல் ; இந்திய மருந்து ஆலை தகர்ப்பு
உக்ரைனின் சுமி நகரில் ரஷ்யா நடத்தியதாக கூறப்படும் டிரோன் தாக்குதலில், இந்தியாவைச் சேர்ந்த மருந்து நிறுவனத்தின் உற்பத்தி ஆலை கடுமையாக சேதமடைந்துள்ளது.
இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா–உக்ரைன் போர் 2022ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் தொடங்கிய நிலையில், தற்போது ஐந்தாவது ஆண்டாக நீடித்து வருகிறது.
உக்ரைனுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து ஆயுதங்கள் மற்றும் நிதியுதவிகளை வழங்கி வருகின்றன.

இந்நிலையில், உக்ரைனின் சுமி நகரில் செயல்பட்டு வந்த இந்திய மருந்து நிறுவனத்தின் ஆலையை இலக்காகக் கொண்டு ரஷிய டிரோன்கள் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதலில் ஆலையின் பெரும்பகுதி சேதமடைந்ததுடன், அப்பகுதியில் இருந்து பெருமளவில் கரும்புகை வெளியேறியதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்துள்ளனர்.
குறித்த இந்திய மருந்து நிறுவனம் 1994ஆம் ஆண்டு உக்ரைனுக்கு இந்திய மருந்துகளை ஏற்றுமதி செய்யும் விநியோக நிறுவனமாக தனது செயல்பாட்டைத் தொடங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் 2002ஆம் ஆண்டு முதல் பிற நிறுவனங்களின் மருந்துகளை விற்பனை செய்வதை நிறுத்தி, சொந்த தயாரிப்புகளை சந்தைப்படுத்தத் தொடங்கியதாக கூறப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக, 2009ஆம் ஆண்டு உக்ரைனின் சுமி நகரில் மருந்து உற்பத்தி ஆலையொன்றை நிறுவியதாகவும், இந்தியாவிலும் பல உற்பத்தி ஆலைகளை அந்த நிறுவனம் நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

50க்கும் மேற்பட்ட பொதுவகை மருந்துகளை உற்பத்தி செய்து வரும் அந்த நிறுவனம், உக்ரைன் உள்ளிட்ட மத்திய ஆசிய நாடுகளுக்கும் தனது தயாரிப்புகளை ஏற்றுமதி செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தாக்குதலுக்கு உக்ரைன் அதிபர் வொலோடிமிர் செலன்ஸ்கி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் அவர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
ரஷ்யா–உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா முன்னெடுத்து வரும் மத்தியஸ்த முயற்சிகளில் இதுவரை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படாத நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான தாக்குதல்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.