நாளுக்கு ஆயிரம் டொலர் வாடகை: கனடாவில் சிக்கிய ரஷ்ய சரக்கு விமானம்
ரொறன்ரோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் சிக்கிய ரஷ்ய சரக்கு விமானம், நாளொன்றுக்கு ஆயிரம் டொலருக்கும் அதிகமான பார்க்கிங் கட்டணத்தை செலுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
ரஷ்யாவில் பதிவு செய்யப்பட்ட Antonov 124 என்ற சரக்கு விமானமானது பிப்ரவரி 27ம் திகதியில் இருந்தே ரொறன்ரோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் பயண அனுமதி மறுக்கப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளது.
உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் படையெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கனடாவின் வான்வெளியை பயன்படுத்த அனைத்து ரஷ்ய விமானங்களும் தடை விதிப்பதாக போக்குவரத்து அமைச்சர் ஒமர் அல்காப்ரா தடை விதித்த அன்று தான் குறித்த விமானமும் கனடாவில் தரையிறங்கியுள்ளது.
இதனையடுத்து, குறித்த சரக்கு விமானம் புறப்பட தடை விதிக்கப்பட்டது. தற்போது மிகவும் பாதுகாப்பான பகுதியில் ரஷ்ய சரக்கு விமானம் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், விமான நிலையத்தில் பொதுவான பார்க்கிங் கட்டண விதிகளுக்கு குறித்த விமானமும் உட்பட்டதாகும் எனவும்,
இதனால் நாள் ஒன்றுக்கு 1,065.60 டொலர் கட்டணமாக செலுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டு ரொறன்ரோ பியர்சன் சர்வதேச விமான நிலைய செய்தி தொடர்பாளர் மின் அஞ்சல் அனுப்பியுள்ளார்.
ஆனால் இதுவரை தொடர்புடைய ரஷ்ய விமான நிறுவனத்திடம் இருந்து பதில் அளிக்கப்படவில்லை என்றே தகவல் வெளியாகியுள்ளது.