உக்ரைனில் தொலைக்காட்சி கோபுரத்தின் மீது ரஷ்யா கொடூர தாக்குதல்! 9 பேர் பலி
உக்ரைன் - ரிவ்னேயில் இருக்கும் தொலைக்காட்சி கோபுரத்தின் மீது நடந்த தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பிராந்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் - ரஷ்யா போர் எப்போது முடிவுக்கு வரும் என உலக நாடுகள் கவலையுடன் எதிர்பார்த்துக்கொண்டிக்கும் அதே வேளையில் ரஷ்ய துருப்புகள் நாளுக்கு நாள் தாக்குதலின் வேகத்தை மும்முரமாக செயற்படுத்தி வருகின்றன. இதனால் உக்ரைன் நகரங்கள் பற்றி எரிந்து வருகின்றன.
மேலும், உக்ரைன் நாட்டில் பாதுகாப்பான இடம் என்ற ஒன்று இல்லவே இல்லை என்பதை உறுதிப்படுத்தும் விதமாக அந்த நாட்டின் அனைத்து நகரங்கள் மீதும் ரஷ்ய துருப்புகள் உக்கிரமான தாக்குதல்களை தொடுத்து வருகின்றன.
வான்வழியாக ரஷ்யப் போர் விமானங்கள் குண்டுமழை பொழிந்து வரும் அதே வேளையில், தரை வழியாகவும் ரஷ்ய துருப்புகள் உக்ரைன் நகரங்களுக்குள் முன்னேறி வருகின்றன.
இந்த நிலையில், உக்ரைனின் ரிவ்னேயில் இருக்கும் தொலைக்காட்சி கோபுரத்தின் மீது ரஷ்ய துருப்புகள் நடத்திய தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பில், ரிவ்னே பிராந்திய ஆளுநர் விட்டலி கோவல் சமூக வலைத்தளத்தில், தெரிவித்தது
“உக்ரைனின் வடக்கு ரிவ்னே பிராந்தியத்தில் உள்ள தொலைக்காட்சி கோபுரத்தின் மீது ரஷ்யாவால் நடத்தப்பட்ட வான்வெளி தாக்குதலில் குறைந்தது ஒன்பது பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஒன்பது பேர் காயமடைந்துள்ளனர். மேலும் இடிபாடுகளுக்கு நடுவில் இன்னும் மக்கள் சிக்கி தவித்து வருகின்றனர்," என்று கூறினார்.