உக்ரைன் ரஷ்ய போர்; நிபுணர்கள் விடுத்த எச்சரிக்கை; உணவுப் பொருட்களை வாங்கிக் குவிக்கும் ஜேர்மன் மக்கள் !
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில் ஜேர்மனியில் உணவுப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து ஜேர்மன் மக்கள் குறிப்பிட்ட சில உணவுப்பொருட்களை வாங்கி சேமிக்கத் துவங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் மக்கள் அதிக அளவில் எண்ணெய் முதலான பொருட்களை வாங்கத் துவங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்பொருள் அங்காடிகள் ஒருவருக்கு இரண்டு போத்தல்கள் எண்ணெய் மட்டுமே வழங்கப்படும் என்பது போன்ற கட்டுப்பாடுகளை விதிக்கத் துவங்கியுள்ளன.
ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளதால், எண்ணெய் மற்றும் உணவுப்பொருட்கள் விநியோகத்தில் பிரச்சினைகள் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு அப் பொருட்களின் விலையும் அதிகரிக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையிலேயே, ஜேர்மன் மக்கள் உணவு பொருட்களை வாங்கிக்குவிக்க தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், பொருட்களை வாங்கிக் குவிப்பதைத் தவிர்க்குமாறு ஜேர்மன் பெடரல் உணவு வர்த்தக கூட்டமைப்பு பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும் கோவிட் பரவலின் போது மக்கள் ஒருவருக்கொருவர் ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தியதைப்போல, இப்போதும் மக்கள் நடந்துகொள்ளவேண்டும் என்று அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.