ஈரானில் உள்ள அமெரிக்க கப்பல்களில் வீரர்களுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை
ஈரானை முற்றுகையிட்டுள்ள அமெரிக்க போர்க்கப்பல்களில் உள்ள வீரர்களுக்கு தரமற்ற உணவுகள் வழங்கப்படுவதாகவும், இதனால் பசியால் வாடி வருவதாகவும் அவர்களின் குடும்பத்தினர் கவலை தெரிவித்துள்ளனர்.
மேற்காசிய நாடான ஈரானுடன், இஸ்ரேல் - அமெரிக்க படைகள் போர் நடத்தி வருகின்றன. அமைதி பேச்சுக்காக இரு வார காலம் தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு உள்ளது. எனினும், ஈரான் துறைமுகங்களை முற்றுகையிட, அமெரிக்கா தன் போர்க்கப்பல்களை மேற்காசியாவில் நிலைநிறுத்தி உள்ளது.

கோரிக்கைகள்
இந்த கப்பல்களில், 10,000க்கும் அதிகமான வீரர்கள் உள்ளனர். அவர்கள் நடுக்கடலிலேயே நீண்ட நாட்கள் தங்கியிருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. வான்வெளி பாதைகளும் மூடப்பட்டிருப்பதால், கப்பல்களுக்கு தேவையான பொருட்களை எடுத்துச் செல்வதில் சிக்கல்கள் உள்ளன.
இந்நிலையில், அமெரிக்க போர்க்கப்பல்களில் உள்ள வீரர்களுக்கு குறைந்த அளவிலேயே உணவு வழங்கப்படுவதாகவும், அதுவும் தரமற்ற நிலையில் இருப்பதாகவும், இதனால் வீரர்கள் பசியில் வாடுவதாகவும், அவர்களின் குடும்பத்தினர் கவலை தெரிவித்து உள்ளனர்.
இது குறித்து, வீரர்களின் குடும்பத்தினர் சமூக வலைதளங்களில் வெளியிட்ட புகைப்படத்தில், வீரர்களுக்கு சிறிய ரொட்டி துண்டும், சிறிதளவு இறைச்சியுமே வழங்கப்படுவது தெரிய வந்துள்ளது. மேலும், காய்கறி, பழங்கள் தீர்ந்து விட்டதால், டப்பாக்களில் அடைக்கப்பட்ட மற்றும் உறைநிலை உணவுகளையே வீரர்கள் நம்பியுள்ளதாக கூறப்படுகிறது.
'ட்ரிபோலி, ஆபிரகாம் லிங்கன்' போன்ற கப்பல்களின் நிலையும் மிக மோசமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்பகுதிக்கான ராணுவ தபால் சேவை நிறுத்தப்பட்டுள்ளதால், குடும்பத்தினர் அனுப்பும் கூடுதல் உணவு பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை பெற முடியாமல் வீரர்கள் தவித்து வருவதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, மனித நேய அடிப்படையில் வீரர்களுக்கு உடனடியாக உணவு வழங்க வேண்டும் என, அமெரிக்க ராணுவத்திடம் கோரிக்கைகள் குவிந்து வருகின்றன.