ஜோ பைடன் அரசாங்கத்தில் முக்கிய பதவியில் சமந்தா பவர்
இன்னும் மூன்று நாளில் பதவியேற்க போகும், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சமந்தா பவரை , USAID பிரதானியாக நியமித்ததுடன், அமெரிக்க அரசின் கபினட் என்ற, துறைசார் செயலாளர்கள் மட்டத்துக்கும் தரமுயர்த்தி, அமெரிக்க தேசிய பாதுகாப்பு சபையிலும் அங்கத்தவராக நியமித்துள்ளார்.
சமந்தா பவரின் விசேட தகைமைகள் அவர், 2013-2017 காலத்தில், அமெரிக்காவின் ஐநா பிரதிநிதியாக இருந்தார்.
அப்போதுதான் இலங்கை தொடர்பான தீர்மானங்கள் மும்முரமாக மனித உரிமை ஆணைக்குழுவில் நிறைவேறின. மனித உரிமைகள், சட்டத்தின் ஆட்சி, நிர்க்கதி சமூகங்களுக்கு ஆதரவளிப்பது, சமத்துவமின்மையை எதிர்ப்பது போன்றவை சமந்தாவுக்கு பிடித்த விஷயங்கள்.
எழுத்தாளருமான சமந்தா, தனது "A Problem from Hell" என்ற நூலுக்காக புகழ் பெற்ற புலிட்சர் விருதை பெற்றவர்.
"ஏன், GENOCIDE என்ற இனப்படுகொலைகளை தடுக்க அமெரிக்க தலைவர்கள் தவறுகிறார்கள்" என தனது நாட்டின் மனசாட்சியை நோக்கி கேட்டு, இந்நூல் எழுதப்பட்டுள்ளது.
2003ம் வருஷம், இந்நூலுக்கான பரிசை இவர் பெற்ற பிறகு, 2009ம் வருஷம் பதவியேற்ற, இவரது கட்சியான ஜனநாயக கட்சியின் அதிபர் பராக் ஓபாமா காலத்தில்தான் இலங்கையில் இறுதி யுத்தமும் நிகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.