அமெரிக்கக் கடற்பகுதியில் விமான விபத்து: கனடாவைச் சேர்ந்த விமானி உட்பட 6 பேர் உயிரிழப்பு
அமெரிக்காவின் கிழக்குக் கடற்பகுதியில் கடந்த வாரம் நேரிட்ட கொடூர விமான விபத்தில் கனடாவின் சஸ்காட்செவன் மாகாணத்தைச் சேர்ந்த இளம் பைலட் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
'லாட்டிடியூட் ஏர் ஆம்புலன்ஸ்' நிறுவனத்திற்குச் சொந்தமான மருத்துவப் போக்குவரத்து விமானம், பெர்முடாவில் இருந்து போஸ்டன் நகருக்குச் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்தது.
அக்டோபர் 3-ஆம் திகதி, மின்சாரக் கோளாறு காரணமாக விமானி அவசரநிலையை அறிவித்தார்.

அதன்பின் வான்வழிப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டு, விமானம் வேகமாக நிலைகுலைந்து கடலில் விழுந்தது.
தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்குப் பிறகு, மசாசூசெட்ஸ் மாகாணத்தில் உள்ள நன்டாக்கெட் தீவுக் கடற்பகுதியில் விமானத்தின் இடிபாடுகள் கண்டெடுக்கப்பட்டன.
கேப்டன் பிலிப் சைல்டர்ஹோஸ் , முதல் அதிகாரி விமானி தாமஸ் ஹென்றி பார்குஹார், செவிலியர் சாரா பாட்டன் மற்றும் சுவாசப் பராமரிப்பு நிபுணர் ஜோலின் வேர் ஆகியோரும், பெர்முடாவைச் சேர்ந்த 2 பயணிகளும் கொல்லப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த 23 வயதான உதவி பைலட் டாமி பார்குஹார் நினைவாக, அவர் பயின்ற ஆல்பெர்ட்டா பிரைரி கல்லூரியில் வளர்ந்து வரும் இளம் பைலட்டுகளுக்கு உதவும் வகையில் 'டாமி பார்குஹார் விமானவியல் கல்வி உதவித்தொகை நிதியம்' அவரது குடும்பத்தினரால் தொடங்கப்பட்டுள்ளது.
அமெரிக்கக் கடலோரக் காவல் படையின் உதவியுடன், கனடா போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் இந்த விபத்து குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.