சட்டமன்றை நாடி சத்திரசிகிச்சை செய்து கொண்ட சிறுமி
கனடாவின் சஸ்காட்சுவான் மாகாணத்தில் சத்திரசிகிச்சைக்காக நீண்டகாலமாகக் காத்திருந்து, கடந்த வாரம் மாகாண சட்டமன்றம் வரை சென்று உதவி கோரிய 17 வயது மாணவியின் கோரிக்கை ஏற்கப்பட்டு, அவருக்கு விரைவான சத்திரசிகிச்சைக்குத் திகதி ஒதுக்கப்பட்டுள்ளது.
சஸ்காடூன் பகுதியைச் சேர்ந்த ஐஷ்மீன் சிங் என்ற மாணவி, சினைப்பை நீர்க்கட்டி காரணமாகக் கடந்த ஓராண்டுக்கும் மேலாகத் தாங்க முடியாத கடுமையான வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
சுகாதாரக் கட்டமைப்பில் நிலவிய தாமதங்களால் விரக்தியடைந்த ஐஷ்மீன் சிங்கும் அவரது தந்தையும், எதிர்க்கட்சியான சஸ்காட்சுவான் என்.டி.பி கட்சியின் உதவியுடன் கடந்த வாரம் மாகாண சட்டமன்றத்திற்குச் சென்று தமது நிலையை வெளிப்படுத்தியிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து மாகாண சுகாதார அமைச்சர் ஜெரமி காக்ரில் உடனான சந்திப்பிற்குப் பின்னர், ஐஷ்மீன் சிங்கிற்கு நவம்பர் மாத இறுதிக்குள் சத்திரசிகிச்சை மேற்கொள்வதற்கான திகதி ஒதுக்கப்பட்டுள்ளதாக என்.டி.பி கட்சி தெரிவித்துள்ளது.
இது குறித்துக் கருத்துத் தெரிவித்த சுகாதார அமைச்சர் ஜெரமி காக்ரில், "நவம்பர் மாத இறுதிக்குள் ஐஷ்மீனுக்குச் சத்திரசிகிச்சை திகதி கிடைத்திருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
சந்திப்பின் போது, சத்திரசிகிச்சை முன்னுரிமை குறித்துத் தமது விசேட வைத்தியருடன் தொடர்ந்து பேசுமாறு நான் வழங்கிய ஆலோசனையை அக்குடும்பத்தினர் பின்பற்றினர். அதன் மூலமே அவர்களுக்குத் தற்போது திகதி கிடைத்துள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நோயாளிகள் தமக்குரிய மருத்துவச் சிகிச்சையையும் கவனத்தையும் பெற்றுக்கொள்வதற்காகச் சட்டமன்றம் வரை வந்து தமது வேதனைகளைப் பகிரங்கமாகத் தெரிவிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படக்கூடாது என்பதே தமது விருப்பம் என எதிர்க்கட்சியான என்.டி.பி தெரிவித்துள்ளது.