வரலாற்றில் தடம்பதித்த சவுதி அரேபியா இளவரசி!
சவுதி அரேபியாவின் இளவரசி மஷீல் பின்த் பைசல் அல் சவுத், சவுதி அரேபியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆசிய யோகாசன விளையாட்டு கூட்டமைப்பின் (AYSF) உறுப்பினராகவும், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக் குழுவின் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
சவுதி அரேபியா நாட்டிலிருந்து முதல் முறையாக ஒரு பெண் இப்படியொரு பதவிக்கு தெரிவு செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் விளையாட்டுகளில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பங்கை மேம்படுத்துவதிலும், தடகள சமூகத்தில் பாதுகாப்பு மற்றும் அதிகாரமளிப்பின் மதிப்புகளை ஊக்குவிப்பதிலும் இளவரிசியின் முயற்சிகள் முழு வெற்றியைப் பெற தாம் மனமார வாழ்த்துத் தெரிவிப்பதாக சவுதி அரேபியாவின் யோகா குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இளவரசி மஷீல் பின்த் பைசல் அல் சவுத் ”யோகா, அஷ்டாங்க வின்யாச யோகா, இமயமலை தியான பாரம்பரியம் மற்றும் யோகா” சிகிச்சை என 15 ஆண்டுகளுக்கும் மேலாக யோகாவில் நிபுணத்துவத்தைக் கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
2022-ம் ஆண்டு AYSF இல் பயிற்சி பெற்ற இளவரசி, யோகா கூட்டமைப்பு மேலாண்மை மற்றும் யோகாசன அமைப்புகளில் தேர்ச்சி பெற்றார்.
மேலும் விளையாட்டு சம்மந்தப்பட்ட அரசு சாரா அமைப்பை சொந்தமாக நடத்தி வருவதோடு அரபு சைக்கிள் ஓட்டுதல் கூட்டமைப்பின் பெண்கள் குழுவிற்கு தலைமை தாங்கியும் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.