ஈரானுக்கு எதிரான மோதலில் பாகிஸ்தானிற்கு சவூதி அழுத்தம்?
ஈரானுக்கு எதிரான மோதலில் பாகிஸ்தானின் இராணுவ உதவியை பெறுவதற்கு சவுதி அரேபியா அழுத்தம் கொடுத்து வருகிறதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
2025-ஆம் ஆண்டு பாதுகாப்பு ஒப்பந்தத்தை சுட்டிக்காட்டி, மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில் பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க சவுதி அரேபியா விரும்புவதாக தெரிகிறது.

ஈரானின் எல்லையில் பாகிஸ்தான் புதிய போர்க்களத்தை திறக்க வேண்டும்
குறிப்பாக, ஈரானின் கிழக்கு எல்லையில் பாகிஸ்தான் ஒரு புதிய போர்க்களத்தை திறக்க வேண்டும் அல்லது ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க உதவ வேண்டும் என்பதே சவுதியின் எதிர்பார்ப்பு என்றும் அந்த தகவல்கள் கூறுகின்றன.
இருப்பினும், பாகிஸ்தானுக்கு இதில் பெரும் ஆபத்துகள் உள்ளன. ஈரானுக்கு எதிரான போர், பாகிஸ்தானில் உள்ள 3 முதல் 5 கோடி ஷியா பிரிவு மக்களிடையே உள்நாட்டு மோதல்களை தூண்டக்கூடும்.
ஏற்கனவே நலிவடைந்துள்ள பாகிஸ்தான் பொருளாதாரம், எண்ணெய் விலை உயர்வால் மேலும் பாதிப்படையும். இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லைகளில் ஏற்கனவே பாதுகாப்பு சவால்களை எதிர்கொண்டு வரும் வேளையில், ஈரானுடன் 900 கி.மீ எல்லையை பகிர்ந்துள்ள பாகிஸ்தான், நேரடியாக போரில் ஈடுபட விரும்புவதில்லை.
அதேவேளை தற்போது வரை பாகிஸ்தான் இந்த விவகாரத்தில் நடுநிலை வகித்து வரும் நிலையில், தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தைகளுக்கே முக்கியத்துவம் அளித்து வருகிறது.