அமெரிக்கா பள்ளியில் துப்பாக்கிச்சூடு; குழந்தைகளை காக்க முயன்ற ஆசிரியைக்கு நேர்ந்த கதி!
அமெரிக்காவில் மிசோரி மாகாணத்தில் செயிண்ட் லூயிஸ் நகரில் மத்திய காட்சி மற்றும் நிகழ்கலை உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்த பள்ளிக்கூடத்தில் நேற்று முன் தினம் உள்ளூர் நேரப்படி காலை 9 மணிக்கு துப்பாக்கியுடன் ஒரு மர்ம வாலிபர் நுழைந்தார்.
அவர் நுழைந்த வேகத்தில் அங்கிருந்தோரை சரமாரியாக சுடத் தொடங்கினார். உடனே அங்கிருந்தவர்கள் அலறியடித்தவாறு அங்கிருந்து ஓட்டம் எடுக்கத்தொடங்கினர்.
துப்பாக்கி குண்டு பாய்ந்தவர்கள் சரிந்து விழுந்தனர். இதற்கிடையே தகவல் அறிந்து அங்கே பொலிஸார் விரைந்து வந்து சேர்ந்தனர். பொலிஸாசாரைப் பார்த்ததும் அவர்களை நோக்கியும் அந்த நபர் சுடத்தொடங்கினார்.
பொலிஸாரும் திருப்பிச்சுட்டனர். இதற்கிடையே அவரது துப்பாக்கி பழுதானது. இதனால் தொடர்ந்து அவரால் சுட முடியாமல் போனது. இந்த சம்பவம் நடந்தபோது அங்கு சுமார் 400 மாணவ, மாணவிகள் இருந்ததாக தெரிய வந்துள்ளது.
தாக்குதல் நடத்திய நபர், பொலிஸாருடன் நடந்த துப்பாக்கிச்சண்டையில் குண்டு பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார். முன்னதாக பள்ளியில் அவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் துப்பாக்கி குண்டு பாய்ந்து 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
அவர்களில் 3 பேர் மாணவிகள், 4 பேர் மாணவர்கள் ஆவார்கள். இந்த தாக்குதலைத் தொடர்ந்து பொலிஸார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் தாக்குதல் நடத்திய நபர், 19 வயதான முன்னாள் மாணவர் என்பது தெரியவந்துள்ளது.
இருப்பினும் அவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதின் பின்னணி என்ன என்பது உடனடியாக தெரியவரவில்லை. அதே போன்று பள்ளியின் கதவுகள் எல்லாம் மூடப்பட்டிருந்த நிலையில் அவர் எவ்வாறு நுழைந்தார் என்பதுவும் தெரியவில்லை.
இந்த தாக்குதல் பற்றி அந்த நகர பொலிஸ் கமிஷனர் மைக்கேல் சாக் கூறியதாவது துப்பாக்கிச்சூடு குறித்து தகவல் அறிந்து நாங்கள் அந்த பள்ளிக்கு விரைந்தோம். அப்போது அங்கிருந்து மாணவ, மாணவிகள் ஓட்டம் எடுத்துக்கொண்டிருந்தார்கள்.
துப்பாக்கிச்சூடு நடத்தியவர், நூற்றுக்கணக்கான தோட்டாக்களை வைத்திருந்திருக்கிறார். அவர் வைத்திருந்தது நீளமான துப்பாக்கி. நிலைமை மேலும் விபரீதம் ஆகுமுன் தடுக்கப்பட்டு விட்டது.
எங்கள் அனைவருக்கும் இது ஒரு மோசமான நாள் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த பள்ளியின் மாணவர் ஒருவர் கூறும்போது, தாக்குதல் நடத்திய நபர் பள்ளிக்குள் வந்து எனது தோழியிடம், நீ சாவதற்கு தயாராகிவிட்டாயா? என்று கேட்டார். நாங்கள் அப்போதே ஓட்டம் எடுக்கத்தொடங்கினோம் என தெரிவித்தார்.
பலியானவர்களில் ஒருவர் அந்த பள்ளிக்கூடத்தின் சுகாதார ஆசிரியை ஜீன் குஸ்கா என குடும்பத்தினரால் அடையாளம் காணப்பட்டுள்ளார். இதுபற்றி அவரது மகள் அபிகயில் குக்ஸா கூறும்போது, என் அம்மா பள்ளிக்குழந்தைகளை அதிகமாக நேசித்தார்.
அவர் குழந்தைகளைக் காக்கிறபோதுதான் உயிர் விட்டிருக்கிறார் என வேதனையுடன் தெரிவித்தார். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம், செயிண்ட் லூயிஸ் நகரையே உலுக்கி உள்ளது.