ஜேர்மனியில் பாடசாலை அருகே இடம்பெற்ற பயங்கர சம்பவம்: சிறுமி கொலை
பாடசாலைக்கு அருகே நடந்து சென்று கொண்டிருந்த 2 மாணவிகளை மர்ம நபர் ஒருவர் கத்தியால் சரமாரியாக குத்தியதில் ஒரு சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
ஜெர்மனியின் தெற்கு பகுதியில் உள்ள இல்லர்கிர்ச்பெர்க் நகரில் பாட்சாலை ஒன்று உள்ளது. நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு வந்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு கையில் கத்தியுடன் வந்த மர்ம நபர் ஒருவர் பாடசாலைக்கு அருகே நடந்து சென்று கொண்டிருந்த 2 மாணவிகளை கத்தியால் சரமாரியாக குத்தினார்.
இதனால் அங்கு பெரும் பதற்றம் உருவானது. மாணவ-மாணவிகள் அலறியடித்தபடி நாலாபுறமும் சிதறி ஓடினர். அதை தொடர்ந்து தாக்குதல் நடத்திய அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடினார்.
அதன்பின்னர் கத்திக்குத்து தாக்குதலில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்த 14 மற்றும் 13 வயதான 2 சிறுமிகளையும் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அவர்களில் 14 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மற்றொரு சிறுமிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில் கத்திக்குத்து தாக்குதலை தொடர்ந்து பொலிஸார் அந்த பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு ஒரு கட்டிடத்தில் ரத்தக்கறை படிந்த கத்தியுடன் பதுங்கியிருந்த 27 வயது வாலிபரை பொலிஸார் கைது செய்தனர்.
முதற்கட்ட விசாரணையில் அவர் எரித்திரியா நாட்டில் இருந்து ஜெர்மனிக்கு அகதியாக வந்தவர் என்பது தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து பொலிஸார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.