கியூபெக்கில் மழை வெள்ளம் பாடசாலைகள் மூடப்பட்டன
கியுபெக்கில் பல பகுதிகள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சில பள்ளிகள் மூடப்பட்டன, மற்றும் வீடுகளில் வசிப்பவர்களுக்கு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.
மொன்ரியாலின் வடகிழக்கே சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ட்ரம்மொண்ட்வில் நகரில், செயின்ட்-ஃபிரான்சுவா நதி நீர்மட்டம் அதிகரித்ததால் 300-க்கும் மேற்பட்ட வீடுகளைச் சேர்ந்த மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இடம்பெயர்ந்தவர்கள் தங்குவதற்காக கிரார்டின் விளையாட்டு மையத்தில் தற்காலிக முகாம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
வெளியேற வேண்டியவர்கள் வீட்டின் வாயு, மின்சாரம் அணைப்பது, அத்தியாவசிய பொருட்களை மேலே நகர்த்துவது, கழிவறைகளை மூடுவது, கதவுகள் மற்றும் ஜன்னல்களை சீல் செய்வது போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
கியூபெக் நகருக்கு தெற்கே அமைந்துள்ள போஸ்வில்லில், சாடியர் நதி கரைபுரண்டதால் பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
சாடியர் நதியின் நீர் நிலை கண்காணிப்பு அமைப்பு (Système de surveillance de la rivière Chaudière) தீவிர வெள்ள எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
போஸ்இத்செமின் பாடசாலை சபையைச் சேர்ந்த (Centre de services scolaire de la Beauce-Etchemin) மூன்று பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன, மற்றும் பள்ளிப் பேருந்து சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பொது பாதுகாப்பு அமைச்சர் பிரான்சுவா பொன்னார்டெல், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 12-க்கும் மேற்பட்ட குடியிருப்பவர்கள் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
வெள்ளம் ஏற்பட்டுள்ள பகுதிகளில் வாகன சாரதிகள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.