ஜப்பான் விமான நிலையத்தில் கத்திரிக்கோல் மாயம் ; விமானச் சேவைகள் ஸ்தம்பிதம்
ஜப்பானின் ஒகினாவா விமான நிலையத்தில் கத்திரிக்கோல் ஒன்று காணாமல் போனதைத் தொடர்ந்து, 20 விமானச் சேவைகள் ஒத்திவைக்கப்பட்டதுடன் சில சேவைகள் ரத்துச் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விமான நிலையத்தின் பாதுகாப்புக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் பணிபுரியும் துப்புரவுத் தொழிலாளி ஒருவர், தனது கத்திரிக்கோலைத் தொலைத்துவிட்டதாகச் சந்தேகம் எழுந்ததை அடுத்து இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதனைத் தொடர்ந்து, பயணிகளின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான நிலையத்தின் சில பாதுகாப்புச் சோதனை முனையங்கள் உடனடியாக மூடப்பட்டதாக ‘கியோடோ நியூஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.
இதனால் விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டதுடன், பயணிகளும் அசௌகரியங்களை எதிர்கொண்டனர்.
சுமார் இரண்டு மணி நேரமாக முன்னெடுக்கப்பட்ட தீவிர தேடுதல் நடவடிக்கையின் பின்னர், காணாமல் போனதாகக் கருதப்பட்ட கத்திரிக்கோல் துப்புரவு நிறுவனத்தின் அலுவலகத்திலேயே கண்டெடுக்கப்பட்டது.
இதனையடுத்து மூடப்பட்ட பாதுகாப்புச் சோதனை முனையங்கள் மீண்டும் திறக்கப்பட்டு, விமான நிலையச் செயற்பாடுகள் வழமைக்குத் திரும்பியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஒரு கத்திரிக்கோல் காணாமல் போனதாக எழுந்த சந்தேகம் காரணமாகப் பெருமளவிலான விமானச் சேவைகள் பாதிக்கப்பட்ட இந்தச் சம்பவம், விமான நிலையப் பாதுகாப்பு நடைமுறைகளின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டியுள்ளது.