பிரான்ஸ் பிரமராக பதவி விலகிய செபாஸ்டியன் லெகோர்
பிரான்சின் ஜனாதிபதி இம்மானுவெல் மக்ரோன், பதவியில் இருந்து விலகிய செபாஸ்டியன் லெகோர்னுவை மீண்டும் பிரதமராக நியமித்துள்ளார்.
பதவியேற்ற சில வாரங்களில், தமது பதவியை கடந்த திங்கட்கிழமை இராஜனாமா செய்த, 39 வயதான செபாஸ்டியன் லெகோர்னு, தற்போது புதிய அமைச்சரவையை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார் என பிரான்ஸ் ஜனாதிபதியின் அலுவலகம் அறிக்கையொன்றினூடாக தெரிவித்துள்ளது.
பிரான்ஸ் அரசியல் சீர்திருத்தங்களை மேற்கொள்வது குறித்து ஜனாதிபதியும் அரசியல் கட்சிகளும் பல நாட்கள் பேச்சுவார்த்தைகளை நடத்தியதன் பின்னர், செபாஸ்டியன் லெகோர்னு மீண்டும் திரும்புவது ஆச்சரியமான நடவடிக்கை என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வருட இறுதிக்குள் பிரான்ஸிற்கு ஒரு பட்ஜெட்டை வழங்கவும், தமது சக குடிமக்களின் அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகளைத் தீர்க்கவும் முடிந்த அனைத்தையும் செய்ய குடியரசுத் தலைவர் என்னிடம் ஒப்படைத்த பணியை நான் ஏற்றுக்கொள்கிறேன் என செபாஸ்டியன் லெகோர்னு தமது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
பிரான்ஸ் மக்கள் எதிர்கொள்ளும் அரசியல் நெருக்கடிக்கும், பிரான்ஸ் நாட்டுக்கும், அதன் நலன்களுக்கும் தீங்கு விளைவிக்கும் உறுதியற்ற தன்மைக்கும் தாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பிரான்ஸ் அரசியலில் ஒரு வியத்தகு திருப்பமாக இந்த நியமனம் அமைந்துள்ளதாக அந்த நாட்டு அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஜனாதிபதி மாளிகையில் தீவிர வலதுசாரி மற்றும் தீவிர இடதுசாரி கட்சியைத் தவிர அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் நேற்று ஜனபதிபதி சந்தித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.