ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினர் 8 பேர் உயிரிழப்பு!
ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 8 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டின் பாக்லான் மாகாணத்தில் புல் இ கும்ரி என்ற தலைநகரில், நெடுஞ்சாலையில் அமைந்த பாதுகாப்பு படையினருக்கான சோதனை சாவடி ஒன்றின் மீது தலீபான் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 8 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். 2 வீரர்களை காணவில்லை என பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
இரண்டு ராணுவ வாகனங்கள் தாக்குதலில் முற்றிலும் சேதமடைந்து விட்டன. பாதுகாப்பு சாவடியும் அழிக்கப்பட்டு விட்டது. இதன்பின்னர் நகர மருத்துவமனையில் வைக்கப்பட்டு இருந்த வீரர்களின் உடல்களை பெற்று கொள்ள அவர்களது குடும்பத்தினர் வந்தனர். பாதுகாப்பு படையினருக்கு அரசு ஆதரவு எதுவும் கிடைப்பதில்லை என்று அரசின் அலட்சியம் பற்றி விமர்சித்து பேசினர்.
இந்த மோதலில் தலீபான்களும் பலத்த காயமடைந்தனர் என பாக்லான் ராணுவ தளபதி பரீத் கூறினார். எனினும் இந்த தாக்குதல் சம்பவம் நடந்தது பற்றி தலீபான் பயங்கரவாதிகள் எதுவும் கூறவில்லை. ஆப்கானிஸ்தான் நாட்டில் தலீபான் பயங்கரவாதிகள் அரசுக்கு எதிராக நீண்டகால போரில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில், அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டில் பணியாற்றி வந்த 2 பெண் நீதிபதிகள் நேற்று காலை ஆயுதமேந்திய பயங்கரவாதிகளால் சுட்டு கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலில் 2 பேர் காயமடைந்தனர்.
இந்த சம்பவத்திற்கு எந்தவொரு பயங்கரவாத இயக்கமும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை. எனினும் ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி, இதற்கு தலீபான் பயங்கரவாத இயக்கமே பொறுப்பு என கூறி கண்டனம் தெரிவித்து பேசினார். இந்த தாக்குதலுக்கு அமெரிக்க அரசும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.