உக்ரைனுக்கு அதிநவீன பிரிட்டன் போர் விமானங்கள்: அமைச்சர் சூசகம்
உக்ரைனுக்கு அதிநவீன போர் விமானங்களை வழங்குவதை தாம் நிராகரிக்கவில்லை என பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சர் பென் வாலஸ் தெரிவித்துள்ளார்.
ஆனால் குறித்த விமானங்கள் வெற்றியை ஈட்டித்தரும் மந்திர சக்தி கொண்டவை அல்ல எனவும் அவர் எச்சரித்துள்ளார். உக்ரைனுக்கு போர் விமானங்கள் வழங்கும் முடிவானது உறுதி செய்யவோ நிராகரிக்கப்படவோ இல்லை என பென் வாலஸ் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யா மீது தாக்கத்தை ஏற்படுத்த தங்களுக்கு எஃப்-16 ரக விமானங்களை வழங்குக என உக்ரைன் சமீப நாட்களாக அமெரிக்காவை கேட்டு வருகிறது. ஆனால், தற்போதைக்கு உக்ரைனுக்கு எஃப்-16 ரக விமானங்கள் வழங்கப்படுவதில்லை என்று அமெரிக்கா நிராகரித்துள்ளது.
இதனிடையே போலந்து உட்பட வேறு உறுப்பு நாடுகள் இந்த விவகாரத்தில் உக்ரைனுக்கு சாதகமான முடிவுக்கு வந்துள்ளது. இந்த நிலையில் தான், போர் விமானங்கள் மட்டுமின்றி, அனைத்து சாத்தியங்களையும் பிரிட்டன் ஆராய்ந்து வருவதாக பென் வாலஸ் தற்போது குறிப்பிட்டுள்ளார்.
ஒரே நாளில் முடிவெடுக்கும் விவகாரம் அல்ல இது, ஆனால் உக்ரைன் நாட்டை சிக்கலில் தள்ளும் எந்த நகர்வும் பிரிட்டன் முன்னெடுக்காது என பென் வாலஸ் குறிப்பிட்டுள்ளார்.
பிரிட்டனின் Typhoon மற்றும் F-35 ரக விமானங்களை உக்ரைனுக்கு அளிக்கும் திட்டம் தற்போது இல்லை என பிரதமர் அலுவலகம் விளக்கமளித்துள்ள நிலையில் தான் பாதுகாப்பு அமைச்சர் பென் வாலஸ் தமது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.