ஐ.நா வதிவிடப் பிரதிநிதியுடனான சந்திப்பில் இலங்கையின் கிழக்கு மாகாண ஆளுநர்!
ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி மார்க் அன்ரே தலைமையிலான உயர்மட்ட குழுவினர் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் குறித்த சந்திப்பானது இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் கிழக்கு மாகாண அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் இனங்களுக்கிடையிலான நல்லுறவை வலுப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
அத்துடன் , கிழக்கு மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு பாதணி வவுச்சர்கள் வழங்கும் திட்டமும் ஆரம்பிக்கப்பட்டது.
இலவச பாதணி வவுச்சர்கள்
கிழக்கு மாகாணத்திலுள்ள 677 கிராமிய பாடசாலைகளைச் சேர்ந்த 157,698 மாணவர்களுக்கு இலவச பாதணி வவுச்சர்களும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டது.
ரணில் விக்கிரமசிங்கவின் தொலைநோக்குப் பார்வைக்கு அமைவாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவின் வழிகாட்டலின் பேரில் பாதணி வவுச்சர்கள் வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.