நள்ளிரவில் நேர்ந்த அதிர்ச்சி ; அழையா விருந்தாளியாய் பெண்ணின் மார்பில் படுத்திருந்த மலைபாம்பு
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பகுதியில் வசிக்கும் ரேச்சல் ப்ளூர் என்ற பெண், திங்கட்கிழமை நள்ளிரவு தனது படுக்கையில் தூங்கிக்கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக மார்பில் மலைப்பாம்பு ஒன்று படுத்திருந்த அதிர்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு செய்திகளில் தகவல் வெளியாகியுள்ளது.
நள்ளிரவில் திடீரென விழித்துக் கொண்ட ரேச்சல், தனது மார்பின் மேல் கனமான பொருள் ஒன்று இருப்பதை உணர்ந்தார். முதலில் அது தனது செல்ல நாய்க்குட்டி என நினைத்த அவர், கைகளால் துழாவிய போது அது வழுவழுப்பாகவும் நெளிந்து கொண்டும் இருந்ததை உணர்ந்து அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக போர்வையை கழுத்து வரை இழுத்துக்கொண்டு அதற்குள் பதுங்கிய ரேச்சல், அருகில் இருந்த தனது கணவரை அழைத்தார். அவர் அறையின் விளக்கை ஏற்றிய போது, படுக்கையில் இருந்தது சுமார் 2.5 மீட்டர் நீளமுள்ள ஒரு மலைப்பாம்பு என்பது தெரியவந்தது.
இந்த காட்சியைக் கண்ட கணவர், “அசையாதே, உன் மேல் பெரிய பாம்பு ஒன்று இருக்கிறது” என்று எச்சரித்ததாக ரேச்சல் பிபிசியிடம் தெரிவித்துள்ளார். அறையில் இருந்த செல்லப்பிராணிகளுக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்பதால், உடனடியாக நாய்களை வெளியே அழைத்துச் செல்லுமாறு கணவரிடம் அவர் கூறினார்.
அதன் பின்னர், மிகுந்த அமைதியுடன், மெல்ல மெல்ல போர்வையிலிருந்து வெளியே வந்து, தன் மீது படுத்திருந்த பாம்பிடமிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள முயன்றார். அந்த பாம்பு, ஜன்னல் கதவின் இடுக்கு வழியாக வீட்டிற்குள் நுழைந்து, நேராக படுக்கையில் விழுந்திருக்கலாம் என அவர் நம்புகிறார்.

பாம்பு மிகவும் பெரியதாக இருந்ததால், அதன் வால் பகுதி ஜன்னலுக்கு வெளியே நீட்டிக் கொண்டிருந்ததாகவும் அவர் கூறினார். மெதுவாக அந்த பாம்பை பிடித்து, அது வந்த வழியாகவே வெளியே தள்ளிய ரேச்சல், அது மிகவும் அமைதியாகவே இருந்ததாகவும், பயந்த அறிகுறிகள் எதுவும் காட்டவில்லை என்றும் தெரிவித்தார்.
இந்த சம்பவத்தில் ரேச்சலுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், செல்லப்பிராணிகளுக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த பாம்பு ‘கார்ப்பெட் மலைப்பாம்பு’ இனத்தைச் சேர்ந்தது என்றும், இது விஷமற்றது என்றும் தெரிவிக்கப்படுகிறது.
ஆஸ்திரேலியாவின் கடற்கரைப் பகுதிகளில் இந்த வகை பாம்புகள் பொதுவாகக் காணப்படுவதுடன், பறவைகள் மற்றும் சிறிய உயிரினங்களை உணவாகக் கொள்ளும் இனமாகும்.