அமெரிக்காவில் மூன்று ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன குழந்தை தொடர்பில் முக்கிய திருப்பம்
அமெரிக்காவில் மூன்று ஆண்டுகளுக்கு முன் நான்கு வயது குழந்தை ஒன்று காணாமல் போன விடயத்தில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.பைஸ்லி ஷுல்டிஸ் என்ற அந்த குழந்தையை யார் வளர்ப்பது என்ற சட்டச் சிக்கலில், அவள் சட்டப்பூர்வ பாதுகாவலர் ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டாள்.
ஆனால், கடந்த 2019ஆம் ஆண்டு குழந்தை திடீரென மாயமானாள். அவளை, அவளது சொந்த பெற்றோரான கிம்பர்லி கூப்பர் மற்றும் கிர்க் ஷுல்டிஸ்ஆகியோரே கடத்தியிருக்கலாம் என கருதப்பட்டது.
இந்நிலையில், திங்கட்கிழமையன்று, பைஸ்லி தன் தாத்தா வீட்டில் தனது பெற்றோருடன் மறைந்திருப்பதாக பொலிசாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது.
இதன்படி பொலிசார் நியூயார்க்கிலுள்ள சாகர்டீஸ் என்ற நகரத்திலுள்ள அந்த வீட்டுக்கு விரைந்தார்கள். வீட்டை சோதனையிடும்போது, அங்கு படிக்கட்டுகள் பொலிசாரின் கவனத்தை ஈர்த்துள்ளன.
பொலிசாரில் ஒருவர் படிக்கட்டுகளுக்குக் கீழே டார்ச் அடித்துப் பார்க்க, அங்கு ஒரு குழந்தையின் கால்கள் தெரிவதை கவனித்துள்ளார்.
உடனடியாக பொலிசார் அந்த படிக்கட்டுகளை அகற்ற, அங்கிருந்த ஒரு சிறிய இரகசிய அறையில் பைஸ்லீயும் அவளது தாயான கிம்பர்லியும் மறைந்திருப்பது தெரியவந்தது.
இதன்போது கிம்பர்லி , கிர்க் மற்றும் கிர்கின் தந்தை ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
மேலும் இந்த வழக்கில், குழந்தை ஏன் அவளுடைய பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்டாள், அவள் கடத்தப்படும்போது யாருடன் வாழ்ந்தாள், என்பது போன்ற விடயங்கள் வெளியிடப்படாததுடன், குழந்தையை கடத்தியதாக யார் மீதும் குற்றம் சாட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.