இலங்கையில் பெண் ஒருவரை அடித்துக் கொன்றவர் அளித்த அதிர்ச்சி வாக்குமூலம்
யாழ். சோமசுந்தரம் அவென்யூவில் உள்ள வீடொன்றில் வயோதிபப் பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதே பகுதியை சேர்ந்த மரியநாயகம் கனிகையம்மா ஜெயசீலி (வயது 72) என்பவரே கடந்த 22ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் அடித்துக்கொலை செய்யப்பட்டார். அங்கு வீட்டுக்கு தனியாக வந்த வாலிபர், பெண்ணை பூந்தொட்டியால் அடித்து, அவர் அணிந்திருந்த தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது .
கொலை நடந்த வீட்டிற்கு அருகில் இருந்த சிசிரிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு யாழ். பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். யாழ்ப்பாணம் முல்லைப் பிரதேசத்தில் கொலைச் சந்தேக நபர் ஒருவர் துவிச்சக்கர வண்டியில் தப்பிச் செல்லும் காணொளி தொடர்பில் சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் வைத்து பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையின் போது, சந்தேக நபர் தனது மோட்டார் சைக்கிளை குத்தகைக்கு செலுத்துவதற்காக இவ்வாறு வன்முறையில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார்.