ஈரான் போராட்டம் குறித்து வெளியான பகீர் தகவல்; மறைக்கப்பட்ட உண்மைகள்
ஈரான் அரசாங்கத்திற்கு எதிராக கடந்த இரண்டு வாரங்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர்ச்சியான மக்கள் போராட்டங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 2,000 என சர்வதேச தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் மீது சா்வதேச நாடுகள் விதித்துள்ள பொருளாதாரத் தடைகள் மற்றும் அந்த நாட்டின் அணுசக்தித் திட்டம் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயா்வுக்கு எதிராகத் தொடங்கிய போராட்டம், தற்போது ஆட்சி மாற்றத்தைக் கோரும் மாபெரும் மக்கள் போராட்டமாக உருவெடுத்துள்ளது.

ஆட்சி மாற்றத்தைக் கோரும் மக்கள்
ஈரானில் போராட்டங்களை ஒடுக்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட கடுமையான நடவடிக்கைகளே இந்த அதிகளவான உயிரிழப்புகளுக்குக் காரணம் என்பதை அந்நாட்டு அதிகாரிகள் முதன்முறையாக ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதேசமயம் தற்போது போராட்டங்கள் நடைபெறும் பகுதிகளில் உள்ள சில வைத்தியசாலைகள், உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களால் நிரம்பி வழிவதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
வைத்தியசாலைகளுக்குக் கொண்டு வரப்பட்டவர்களில் பெரும்பான்மையானோர் 20 முதல் 25 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்கள் என டெஹ்ரானில் உள்ள வைத்தியசாலை வட்டாரங்கள் வெளிநாட்டு ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளன.
அவர்களில் அநேகமானோர் தலை அல்லது நெஞ்சுப் பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியிருந்ததாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை ஈரானில் மக்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், போராட்டத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கை 646 ஆக உயர்ந்துள்ளதாக ஈரானில் உள்ள செயல்பாட்டாளர்களிடமிருந்து கிடைத்துள்ள தகவலின் அடிப்படையில் அமெரிக்காவைச் சேர்ந்த மனித உரிமை செயல்பாட்டு செய்தி முகமையொன்று வெளியிட்டுள்ளது.
எனினும், போராட்டங்களின்போது ஏற்பட்ட உயிரிழப்பு குறித்த அதிகாரபூர்வ தரவுகள் ஈரான் அரசு தரப்பிலிருந்து வெளியிடப்படவில்லை.