அமெரிக்காவை உலுக்கும் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் ; ஒருவர் பலி, 4 பேர் படுகாயம்
அமெரிக்காவில் துப்பாக்கி வைத்திருப்போரின் எண்ணிக்கை அதிகம் என்பதால், அடிக்கடி பொது இடங்களில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடைபெறுவது அங்கு வழக்கமான நிகழ்வாக மாறிவிட்டது.
இந்நிலையில் அமெரிக்காவின் ஒஹையோ மாகாணத்தில் மர்ம நபர் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்ததுடன் , 4 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.
மர்ம நபர் துப்பாக்கிச் சூடு
ஒஹையோ மாகாணத்தின் போல்வார்டு பகுதியில் செயல்பட்டு வரும் வால்மார்ட் சூப்பர் மார்க்கெட்டில் நேற்று மர்ம நபர் ஒருவர் உள்ளே நுழைந்து திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாகாண போலீஸார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர். அப்போது தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு துப்பாக்கிச் சூடு நடத்தியவர் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.
இதையடுத்து நிலைமை கட்டுக்குள் இருப்பதாக அறிவித்துள்ள காவல் துறையினர், இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.
அதேவேளை அமெரிக்காவில் கடந்த ஓராண்டு காலத்தில் மட்டும் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன் , ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.