இறுதிச்சடங்கின் போது துப்பாக்கி சூடு ; அமெரிக்காவில் சம்பவம்
அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணம் ஹார்ட்போர்ட் நகரத்தில் ஒரு தேவாலயம் அமைந்துள்ளது. அங்கு நேற்று இறுதிச்சடங்கு நிகழ்வு நடைபெற்றது.
இதில் உயிரிழந்தவரின் உறவினர்கள், நண்பர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது குடும்ப உறுப்பினர்களிடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர் கைகலப்பாக மாறியதில் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். அப்போது அங்கிருந்த ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தாக்கினார்.
இதற்கு பதிலடியாக ஒரு பெண் துப்பாக்கியால் சுட்டுத்தள்ளினார். இதனால் அங்கிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.
இதில் படுகாயம் அடைந்த 2 பேர் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.