சுபான்ஷு சுக்லா வெற்றிகரமாக பூமிக்கு திரும்பினார்
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேரும் ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் மூலம் நேற்று மாலை 4.45 மணிக்கு பூமிக்கு புறப்பட்டனர்.
இந்நிலையில், விண்வெளி நிலையத்தில் இருந்து புறப்பட்ட டிராகன் விண்கலம் இன்று மதியம் வளிமண்டல பகுதிக்குள் நுழைந்தது.
இதையடுத்து, டிராகன் விண்கலத்தில் உள்ள 2 சிறிய ‘டுரோக்’ பாராசூட்டுகள் பூமிக்கு மேல் சுமார் 5.5 கிலோ மீட்டர் உயரத்தில் கலிபோர்னியா கடலின் மேல் பகுதியில் திறக்கப்பட்டது.
அதன்பின், 4 பெரிய பாராசூட்டுகள் விரிந்து பசிபிக் பெருங்கடலில் கலிபோர்னியா கடற்கரையில் பத்திரமாக தரையிறங்கியது.
அதன்பின், 10 நிமிடங்களில் ஸ்பேஸ் எக்ஸின் மீட்புக் கப்பல் விண்கலத்தை அடைந்தது. விண்கலத்தில் இருக்கும் சுபான்ஷு சுக்லா உள்பட 4 விண்வெளி வீரர்களையும், மீட்புக்குழுவினர் மீட்டு மருத்துவ பரிசோதனைகளுக்காக அழைத்துச் சென்றனர்.
சுக்லாவின் பணி இஸ்ரோவின் ககன்யான் திட்டங்களுக்கு மேலும் உதவிகரமாக இருக்கும் என நாசா, இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.