மிசிசாகாவில் இரயில் விபத்து: லேக்சோர் வெஸ்ட் இரயில் சேவைகள் பாதிப்பு!
கனடாவின் மிசிசாகா பகுதியில் சனிக்கிழமை இரவு நபரொருவர் ஜி.ஓ இரயிலில் மோதி விபத்துக்குள்ளானதை அடுத்து, லேக்சோர் வெஸ்ட் வழித்தடத்தின் ஒரு பகுதி சேவை தற்காலிகமாக முடங்கியது.
இதன் காரணமாக போர்ட் குரெடிட் மற்றும் எக்சிபிஷன் நிலையங்களுக்கு இடையிலான இரயில் சேவைகள் இடைநிறுத்தப்பட்டன.
ஃபோர்த் வீதிக்கு தெற்கே உள்ள ஒக்டன் அவென்யூ இரயில் பாதைக் கடவையில் இரவு 8:00 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

விபத்துக்கான பின்னணி குறித்த தகவல்கள் உடனடியாக வெளியாகவில்லை.
லேக்சோர் வெஸ்ட் பாதையில் பெரும் சேவைத் தாமதம் ஏற்பட்டது. பயணிகளின் வசதிக்காக போர்ட் குரெடிட் மற்றும் கிப்ளிங் நிலையங்களுக்கு இடையே விரைவுப் பேருந்து சேவைகள் இயக்கப்பட்டன.
இச்சம்பவத்தின் தாக்கம் காரணமாக லேக்சோர் ஈஸ்ட் வழித்தடத்தின் இரண்டு இரயில் பயணங்களும் ரத்து செய்யப்பட்டன.
துப்புரவு மற்றும் விசாரணைப் பணிகளைத் தொடர்ந்து, இரவு 10:00 மணிக்குச் சற்று முன்னர் வழமையான இரயில் சேவைகள் மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டுவரப்பட்டன.