கனடாவில் மனிதக் கடத்தல்: சோமாலிய அகதிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை!
கனடாவின் மனிட்டோபா எல்லையைக் கடந்து சட்டவிரோதமாக குடியேறுபவர்களுக்குப் பணத்திற்காக உதவிய சோமாலிய அகதி அப்தி ஹாசன் அலிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பிணையில் வெளிவந்த நிலையிலும் மீண்டும் அதே குற்றத்தில் ஈடுபட்டது நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது. குடிவரவு மற்றும் அகதிகள் சட்டத்தை மீறி, முறையான விசா அல்லது பாஸ்போர்ட் இல்லாதவர்களை எல்லை தாண்டி அழைத்துச் சென்ற குற்றத்தை அப்தி ஹாசன் அலி நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
2024 பிப்ரவரி மாதம் அமெரிக்க எல்லையிலிருந்து கடுங்குளிரில் பல மணி நேரம் நடந்து வந்த 8 வெளிநாட்டினரை வாகனத்தில் அழைத்துச் சென்றபோது முதல்முறை சிக்கினார்.

பின்னர் பிணையில் வெளிவந்த அவர், அதே ஆண்டு டிசம்பர் மாதம் மீண்டும் 5 வெளிநாட்டினரை வாடகை வாகனத்தில் கடத்த முயன்றபோது கைது செய்யப்பட்டார்.
-20 முதல் -25 பாகை செல்சியஸ் வரையிலான கடுமையான குளிர்காலச் சூழ்நிலையில் இந்த மனிதக் கடத்தல் நடந்துள்ளது.
அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் எதுவும் தவிர்க்கப்பட்டுள்ளதாக நீதிபதி ரேச்சல் ரூசன் தெரிவித்துள்ளார். அரசு தரப்பு மற்றும் வழக்கறிஞரின் கூட்டுப் பரிந்துரையை ஏற்று நீதிபதி 4 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கினார்.
ஏற்கனவே சிறையில் கழித்த நாட்களைக் கணக்கில் கொண்டால், இன்னும் 500 நாட்கள் அவர் தண்டனையை அனுபவிக்க வேண்டும்.
மேலும் இவருக்கு நாடு கடத்தப்படும் அபாயமும் உள்ளது. சோமாலியாவில் அரசியல் வன்முறையிலிருந்து தப்பிப் பிழைத்த இவர், மற்றவர்களும் பாதுகாப்பான இடத்தை அடைய உதவ வேண்டும் என்ற எண்ணத்திலும், நிதிச் சிக்கல் காரணமாகவுமே இதைச் செய்ததாகத் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.