ஆப்கானிஸ்தானை வீழ்த்தி உலகக் கிண்ண தொடரில் இருந்து வெளியேற்றிய தென்னாப்பிரிக்கா!
2023 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் அணியை 5 விக்கெட்டுக்களால் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அணி வெற்றியைப் பெற்றுள்ளது.
இன்றைய தினம் இடம்பெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 244 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
ஆப்கானிஸ்தான் அணி சார்பில் அதிகபட்சமாக அஸ்மத்துல்லா உமர்சாய் ஆட்டமிழக்காது 97 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
பந்து வீச்சில் தென்னாப்பிரிக்கா அணி சார்பில் ஜெரால்ட் கோட்ஸி 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
இதற்கமைய, 245 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி 47.3 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
துடுப்பாட்டத்தில் தென்னாப்பிரிக்கா அணி சார்பில் அதிகபட்சமாக ராஸ்ஸி வான் டெர் டுசென் 76 ஓட்டங்களை ஆட்டமிழக்காது பெற்றுக் கொண்டார்.
ஆப்கானிஸ்தான் அணி சார்பில் பந்து வீச்சில் மொஹமட் நபி மற்றும் ரஷீத் கான் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.
இந்த தொடரில் ஆப்கானிஸ்தான் அணி தான் விளையாடிய 9 போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றிப் பெற்று 8 புள்ளிகளுடன் தொடரில் இருந்து வௌியேறுகிறது.
இதேவேளை, தென்னாபிரிக்கா அணி ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.