தென்னாப்பிரிக்காவில் வேகமாகப் பரவும் இன்னொரு கொரோனா... இளைஞர்களையும் தாக்குமா?
உலகையே உலுக்கிவரும் கொரோனா வைரசுக்கு தடுப்பூசிகள் வரத் தொடங்கிவிட்டன என்று மனித குலம் ஆசுவாசப்படுவதற்குள், பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்ட அந்த வைரசின் புதிய திரிபு வேகமாகப் பரவக்கூடியது என்று தெரிய வந்த நிலையில் மீண்டும் மேற்கத்திய நாடுகளில் பதற்றம் தொற்றிக் கொண்டது.
இந்நிலையில், இது போதாதென்று தென்னாப்பிரிக்காவில் உலாவரும் கொரோனா வைரசின் மேலும் ஒரு புதிய திரிபு அடுத்தடுத்த பீதிக்கு காரணமாகியுள்ளது.
பிரிட்டனில் இரண்டு பேருக்கு, கொரோனா வைரஸின் தென்னாப்பிரிக்க வகை புதிய திரிபு கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக, அந்நாட்டின் சுகாதாரச் செயலர் மேட் ஹான்காக் கூறியுள்ளார்.
லண்டன் மற்றும் வட மேற்கு பிரிட்டனில் புதிதாக பரவத் தொடங்கி இருக்கும் இந்த கொரோனா வைரஸின் புதிய திரிபு, தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த தென்னாப்பிரிக்க வகை திரிபு தொற்றியவர்கள் சமீபத்தில் தென் ஆப்பிரிக்கா பயணம் செய்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.