தென் கொரிய முன்னாள் ஜனாதிபதிக்கு 5 ஆண்டுகள் சிறை
தென்கொரியா முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் யோலுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2024 ஆம் ஆண்டு திடீரென இராணுவ சட்டத்தை (Martial Law) அமுல்படுத்திய விவகாரத்தில், யூன் சுக் யோலுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பதவியில் இருந்து நீக்கப்பட்டார்
அப்போது ஆட்சியை கவிழ்க்க எதிர்க்கட்சிகள் முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டி யூன் சுக் யோல் இராணுவ சட்டத்தை பிரகடனப்படுத்தினார்.
எனினும், இந்த முடிவுக்கு எதிராக பொதுமக்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து, சில மணி நேரங்களிலேயே அந்தச் சட்டம் திரும்பப் பெறப்பட்டது.
சம்பவத்தின் பின்னர், அரசியல் மற்றும் சட்டரீதியான நெருக்கடிகள் தீவிரமடைந்த நிலையில், யூன் சுக் யோல் ஜனாதிபதி பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
கிளர்ச்சியைத் தூண்டியதாகவும், அரசியல் அமைப்பை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு நீதிமன்ற விசாரணை நடைபெற்று வருகிறது.
இராணுவ சட்டம் அமுல்படுத்தியதுடன் தொடர்புடைய சில குற்றச்சாட்டுகள் மற்றும் அதிகாரிகள் கைது செய்ய வந்தபோது அவர்களின் முயற்சிகளை மீறிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், யூன் சுக் யோலுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் யோலுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள 8 குற்றவியல் வழக்குகளில் இதுவே முதல் தீர்ப்பு என நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதேசமயம் மீதமுள்ள வழக்குகள் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.