இங்கிலாந்தில் துயரத்தில் முடிந்த சாகசம்; அதிர்ச்சியில் பார்வையாளர்கள்
இங்கிலாந்தின் Whitley Bay-இல் உள்ள ஸ்பானிஷ் சிட்டி சம்மர் ஃபன்ஃபேர் (Spanish City Summer Funfair) பகுதியில் நடந்த கோர விபத்து, பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அங்கிருந்த மக்கள் கண்ணெதிரே, கேளிக்கை பூங்காவின் ஊழியர் ஒருவர், தான் இயக்கிவந்த ராட்டினத்தில் சிக்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேளிக்கை பூங்காவிற்கு பூட்டு
கோரி லீ ஸ்டாவர்ஸ் (Corrie Lee Stavers) என்ற 20 வயது இளைஞர் தான் இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த இளைஞர் ஒரு ராட்டினத்தை இயக்கி கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக ராட்டினத்தில் சிக்கி, தலையில் பலத்த காயமடைந்தார். உடனடியாக அவசர உதவி சேவைகளும், Great North Air Ambulance Service-ம் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தன.
ஆனால், மருத்துவ குழுவினரின் தீவிர முயற்சிக்கும் பலனின்றி, சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து நார்தம்பிரியா காவல் துறை (Northumbria Police) வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பணியிட விபத்து குறித்து எங்களுக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்தபோது, 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் தலையில் தீவிர காயத்துடன் காணப்பட்டார். மருத்துவ குழுவினரின் முயற்சிக்கு மத்தியிலும் அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சோகமான நேரத்தில் குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கல்கள்” என தெரிவித்துள்ளனர்.
சம்பவம் குறித்து ஹெல்த் அண்ட் சேஃப்டி எக்ஸிக்யூட்டிவ் (HSE) உடன் இணைந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், மறு அறிவிப்பு வரும் வரை இந்த கேளிக்கை பூங்கா மூடப்படுவதாகவும் காவல் துறை அறிவித்துள்ளது.
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        