ஈஸ்டர் தாக்குதல் விவகாரம்: இலங்கையில் இரு உயர் அதிகாரிகள் விடுதலை!
இலங்கையின் உயர் அதிகாரிகள் இருவர் மீதான குற்றச்சாட்டுகளை ரத்து செய்துள்ள கொழும்பு நீதிமன்றம், இருவரையும் இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்து உத்தரவிட்டது.
இன்று வெள்ளிக்கிழமை (18-02-2022) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இலங்கையில் கடந்த 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி ஈஸ்டர் தினத்தன்று 3 தேவாலயங்கள் மற்றும் ஆடம்பர ஓட்டல்களில் தொடர் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.
தவ்ஹீத் ஜமாத் பயங்கரவாதிகள் நடத்திய இந்த மனித வெடிகுண்டு தாக்குதலில், 11 இந்தியர்கள் உள்பட சுமார் 270 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இச் சம்பவம் தொடர்பில் பல்வேறு வழக்குகளை பதிவு செய்த இலங்கை பொலிஸார், இது தொடர்பாக ஏராளமானோரை கைது செய்து விசாரித்தனர்.
அத்துடன் இந்த தாக்குதல் குறித்து முன்கூட்டியே உளவுத்துறை தகவல் கிடைத்தும் அலட்சியமாக இருந்ததாக அப்போதைய காவல்துறை தலைவர் புஜித் ஜெயசுந்தரா, பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
பின்னர் பிணையில் விடுதலை ஆன அவர்கள் இருவரும் பணியில் இருந்து நீக்கப்பட்டனர். அவர்கள் மீதான வழக்கு கொழும்பு உயர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த வழக்கில் தற்போது ஜெயசுந்தரா மற்றும் பெர்னாண்டோ ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகளை ரத்து செய்துள்ள நீதிமன்றம், இருவரையும் இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்து உத்தரவிட்டது.