உலகின் மிக அழகான தீவாக இலங்கை முதலிடம்!
இலங்கைஉலகின் மிக அழகான தீவாக அதிகாரப்பூர்வமாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் புகழ்பெற்ற முன்னணி சுற்றுலா இணைய தளமான Big 7 Travel வெளியிட்டுள்ள உலகின் "50 சிறந்த தீவுகள்" வருடாந்த பட்டியலில், உலகின் மிகவும் பிரபலமான பிரான்சின் பொலினீசியாவில் உள்ள 'மோரியா' மற்றும் ஈக்வடாரின் 'கலாபகோஸ்' போன்ற தீவுகளைப் பின்தள்ளி இலங்கை முதலிடத்தை தன்வசப்படுத்தியுள்ளது.

அழகிய கடற்கரைகள் ...ஆன்மீக மற்றும் புரதான நகரங்கள்
இலங்கையின் 1,300 கிலோமீற்றருக்கும் அதிக நீளமுள்ள அழகிய கடற்கரைகள் (மிரிஸ்ஸ, உனவடுன, பெந்தோட்டை, அருகம்பே, பாசிக்குடா), சிகிரியா, தம்புள்ளை குகைக்கோயில், வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி, அனுராதபுரம், பொலன்னறுவை ஆகிய ஆன்மீக மற்றும் புரதான நகரங்கள் சுற்றுலாப் பயணிகளை பெரிதும் கவர்ந்துள்ளன.
யானைகள் மற்றும் சிறுத்தைகள் வாழும் யால தேசிய பூங்கா, மிரிஸ்ஸவில் திமிங்கிலம் பார்த்தல் மற்றும் கல்பிட்டியில் திமிங்கலம் பார்த்தல் போன்ற பல்லுயிர் பெருக்க அம்சங்கள் இலங்கைக்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளன.
மத்திய மலைநாட்டின் தேயிலைத் தோட்டங்கள் மற்றும் கண்டி - எல்ல இடையிலான தொடருந்து பயணம் மூடுபனி சூழ்ந்த மலைப் பிரதேசங்கள் இலங்கையின் அழகை பறைசாற்றுகின்றன
. முந்தைய ஊடகங்களின் மதிப்பீடுகள், சமூக வலைத்தளங்களில் இலங்கையின் பிரபலம் மற்றும் பயணிகளின் தற்போதைய ஆர்வம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தத் தரவரிசை கணிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை இந்த கௌரவமானது, உலகளாவிய சுற்றுலா வரைபடத்தில் இலங்கையின் மதிப்பை மேலும் உயர்த்துவதுடன், நாட்டின் பொருளாதார மற்றும் சுற்றுலாத்துறையின் மீள் எழுச்சிக்கு ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.