அவுஸ்திரேலியாவில் விவாகரத்து பெற்ற மனைவியை வெட்டிக் கொன்ற இலங்கையர்
அவுஸ்திரேலியாவில் தனது விவாகரத்து பெற்ற மனைவியை வெட்டிக் கொன்ற இலங்கையர் ஒருவர் அந்நாட்டு நீதிமன்றத்தினால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார்.
மெல்போர்ன் நகருக்கு அருகில் உள்ள சென்டிஹர்ஸ்ட் என்ற இடத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது 47 வயதான தினேஷ் குரேரா தனது பாதுகாப்பிற்காகவே இவ்வாறு செயற்பட்டதாக நீதிமன்றில் தெரிவித்திருந்தார்.

பெண்ணின் உடலில் 35 காயங்கள்
இந்த நிலையில் வழக்கில் தாம் கொலை செய்யவில்லை என்றும், தற்காப்புக்காகவே அவரை தாக்கியதாகவும் குறித்த இலங்கையர் வாக்குமூலம் வழங்கியிருந்தார்.
எனினும் அவர் கொலை செய்தமையை உயர் நீதிமன்ற விசாரணை உறுதிப்படுத்திப்பட்டதைத் தொடர்ந்து அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விக்டோரியாவின் உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (30) இந்த உத்தரவை பிறப்பித்தது. 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 03 ஆம் திகதி, நிலோமி பெரேரா, வீட்டிற்குள் தாக்கப்பட்டதுடன், குரேரா அந்த கொலையை செய்ததாக ஒப்புக்கொண்டார்.
ஆனால் அவர் தனது உயிரைப் பாதுகாப்பதற்காக இதைச் செய்ததாகக் கூறினார். விவாகரத்து பெற்ற மனைவி தன்னை கத்தியைக் காட்டி மிரட்டி விரலை வெட்டிவிட்டதாக விசாரணையில் அவர் கூறியுள்ளார்.
அவர் தன்னைத் தாக்கிவிடுவாரோ என்று பயந்ததால், கோடரியால் பலமுறை தாக்கியதாக குரேரா நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
அந்த பெண்ணின் உடலில் 35 காயங்கள் இருந்ததாக அரச சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்தார். எனினும் தாயும் தந்தையும் சண்டையிடுவதை மகளும் மகனும் பார்த்ததாகவும், மகன் உதவி கேட்டு அலறிய போது, குரேரா அவரையும் தாக்க முயன்றதாகவும் நீதிமன்றத்தில் தெரியவந்துள்ளது.
மேலும் 16 வயது மகளும் 17 வயது மகனும் நீதிமன்றத்தில் சாட்சியமளித்து, அப்பா, அம்மாவை தாக்கிய விதத்தை விவரித்திருந்தார்கள்
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        