மகனை இழந்து அனில் அகர்வால் ; சொத்தில் 75% மக்களுக்கு வழங்குவதாக அறிவிப்பு
பெருந்தொழிலதிபரும் வேதாந்தா குழுமத்தின் தலைவருமான அனில் அகர்வாலின் மகன் அக்னிவேஷ் அகர்வால் (49) உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்ததை தொடர்ந்து சொத்தில் 75 சதவீதத்திற்கும் அதிகமானவை சமூகத்திற்கு அளிக்கப்படும் என அவரது தந்தை குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பனிச்சறுக்கு சாகச விளையாட்டில் ஈடுபட்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில் அக்னிவேஷ் அகர்வாலுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் சிகிச்சை பலனின்றி காலமானார்.
அவர் Fujeirah Gold என்ற நிறுவனத்தை தொடங்கியதுடன், Hindustan Zinc நிறுவனத்தின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

விளையாட்டு மற்றும் இசை ஆகியவற்றிலும் அவர் அதிக ஆர்வம் கொண்டவராக இருந்தார். “எனக்கு அவர் மகன் மட்டுமல்ல; நண்பர், வழிகாட்டி, எனது உலகம்” என கூறிய அனில் அகர்வால், இந்த இழப்பில் இருந்து தானும் தனது மனைவி கிரணும் மீண்டு வர கடினமாக போராடி வருவதாக தெரிவித்தார்.
மேலும், மகனின் நினைவாக மனிதநேயச் செயல்பாடுகளில் தன்னை முழுமையாக அர்ப்பணிக்க உள்ளதாகவும் அவர் அறிவித்தார்.
எந்தக் குழந்தையும் பசியுடன் உறங்கக் கூடாது, கல்வி மறுக்கப்படக் கூடாது, பெண்கள் சுயாதீனமாக வாழ வேண்டும், இளைஞர்களுக்கு அர்த்தமுள்ள வேலை வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்ற கனவை தானும் தனது மகனும் பகிர்ந்து கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அந்த வகையில், எங்கள் சொத்தில் 75 சதவீதத்திற்கும் அதிகமானவை சமூகத்திற்கு அளிக்கப்படும் என்ற வாக்குறுதியை அக்னிக்கு நான் அளித்திருந்தேன்" என குறிப்பிட்டுள்ளார்.

இன்று நான் அந்த வாக்குறுதியை நிறைவேற்றி, இன்னும் எளிமையான வாழ்க்கையை வாழத் தீர்மானித்துள்ளேன் என்றார். இந்தியா மீதும் அக்னிவேஷ் பெரும் நம்பிக்கையையும், கனவையும் வைத்திருந்தார் என அனில் பகிர்ந்துள்ளார்.
'அப்பா, ஒரு தேசமாக நமக்கு எதுவும் குறைவு இல்லை. நாம் ஏன் பின்தங்கியிருக்க வேண்டும்?' என்று என்னிடம் கேட்பார்" என்று தனது மகன் குறித்து அவர் நினைவுக்கூர்ந்தார்.
இறுதியாக அவரது மகனுக்கான அஞ்சலி குறிப்பில், "நீ இல்லாமல் இந்தப் பாதையில் எப்படி நடப்பது என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் நான் உங்கள் கனவை முன்னோக்கி எடுத்துச் செல்ல முயற்சிப்பேன்" என்றார்.