டிரம்பின் செயல்களால் சரிந்து போன பங்குச் சந்தைகள்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சீனா, மெக்சிக்கோ மற்றும் கனடா ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி விதிக்கப்படும் என அறிவித்ததனை அடுத்து ஆசியப் பங்குச் சந்தைகள் வீழ்ச்சியடைந்துள்ளன.
குறிப்பாக ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளின் பங்குச்சந்தையின் குறியீடுகள் சரிவை வெளிப்படுத்தியுள்ளன.
ஹொங்கொங் பங்குச்சந்தை நிறுவனங்கள் ஆரம்பத்தில் 2 வீதத்திற்கும் அதிக சரிவை எதிர்நோக்கிய போதிலும், பின்னர் ஓரளவு மேம்பட்டதாக வர்த்தக தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
கனேடிய மற்றும் மெக்சிக்கன் பொருட்களுக்கு 25 சதவீத வரிகளையும், சீன பொருட்களுக்கு 10 சத வீத வரியையும் டொனால்ட் ட்ரம்ப் நேற்று முன்தினம் அறிவித்தார். அவரின் இந்த திடீர் நடவடிக்கைக்குப் பதிலளிக்கும் விதமாகக் கனடாவும் மெக்சிகோவும் அமெரிக்கப் பொருட்களுக்கு, தங்கள் சொந்த வரிகளை அறிவித்துள்ளன.
சீனா உடனடியாக பதில் நடவடிக்கைகளை எடுக்காத போதிலும் கட்டாயமாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்துள்ளது. எப்படியிருப்பினும் சீனா, மெக்சிக்கோ மற்றும் கனடா ஆகிய நாடுகள், அமெரிக்காவின் முதல் மூன்று வர்த்தக பங்காளிகளாகும்.
அதேவேளை, அமெரிக்கச் சர்வதேச மேம்பாட்டு நிறுவனத்தின் இரண்டு அதியுயர் பாதுகாப்பு அதிகாரிகளை டிரம்ப் நிர்வாகம் பதவி விலக்கியுள்ளது.
இந்த அமைப்பின் சுதந்திர தன்மையை ஒழித்து அதனை வெளியுறவுத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் பட்சத்தில், ஏராளமானவர்கள் தங்கள் பதவியினை இழக்க நேரிடும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உலகளாவிய ரீதியாக பில்லியன் கணக்கான டொலர் செலவில் உயிர்காக்கும் உதவிகளுக்கு நிதி உதவி செய்துவரும் யூ.எஸ் எயிடுக்கும் பாதிப்பு ஏற்படலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.