உடனடியாக சண்டையை நிறுத்துங்கள்; இஸ்ரேலையும் ஹமாஸையும் வலியுறுத்தும் உலக நாடுகள்
கடந்த 7 ஆம் திகதி ஆபித்து 19 நாட்களாக தொடரும் போரை உடனடிச் நிறுத்துமாறு அமெரிக்கா, கனடா, ரஷ்யா உள்ளிட்ட உலக நாடுகள் இஸ்ரேலையும் ஹமாஸையும் வலியுறுத்தியுள்ளன.
காஸா வட்டாரத்துக்குள் சண்டையால் பாதிக்கப்பட்டுள்ள பாலஸ்தீனர்களுக்கு மனிதாபிமான உதவிப் பொருள்களைக் கொண்டுசெல்ல அந்தச் சண்டை நிறுத்தம் அவசியம் என்று அவை கூறியதாக AFP செய்தி வெளியிட்டது.
7000 இற்கும் அதிகமானோர் உயிரிழப்பு
இஸ்ரேலுக்கும் ஹமாஸ் கிளர்ச்சிக் குழுவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள சண்டை 3ஆவது வாரத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் உலகத் தலைவர்கள் சண்டை தொடர்ந்து பரவாமல் இருப்பதைத் தடுக்க முற்படுகின்றனர்.
நேற்று (24 அக்டோபர்) தண்ணீர், உணவு, மருந்துப் பொருள்களை ஏற்றியிருந்த 8 லாரிகள் காஸாவுக்குள் மீண்டும் அனுப்பப்பட்டன.
ஆனால் 2.3 மில்லியன் மக்கள் வசிக்கும் அந்தப் பகுதிக்கு 20 மடங்கு அதிகமாக உதவிப் பொருள்கள் தேவைப்படுவதாக ஐக்கிய நாட்டு நிறுவனம் இதற்குமுன்னர் கூறியிருந்தது.
அதேவேளை ஹமாஸ் இதுவரை 4 பிணையாளிகளை விடுவித்துள்ள நிலையில் அமெரிக்கா - இஸ்ரேல் இரட்டைக் குடியுரிமையை வைத்துள்ள தாயும் மகளும் அவர்களில் அடங்குவர்.
இரு தரப்பு போரால் பெண்கள் குழந்தைகள் உட்பட 7000 இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளமை பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.