தென் கொரியாவில் கோர தாண்டவமாடிய புயல்! தவிக்கும் மக்கள்
தென் கொரியாவை பந்தாடிய ‘ஹின்னம்னோர்’ புயலுக்கு 2 பெண்கள் பலியாகினர். பல்லாயிரக்கணக்கான வீடுகள் இருளில் மூழ்கின சியோல், தென்கொரியா நாட்டை 'ஹின்னம்னோர்' புயல் நேற்று பலமாக தாக்கியது.
இந்த புயல் அதிகாலை 4.50 மணிக்கு உல்சான் நகரம் அருகே கரையை கடந்தது. இதன் காரணமாக அந்த நாட்டின் தென் பகுதிகளில் மணிக்கு 140 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசியது. 3 அடி அளவுக்கு பலத்த மழை பெய்தது.
பல இடங்களில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஆங்காங்கே நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. சாலைகள் சேதம் அடைந்தன. இதனால் போக்குவரத்து பாதித்தது. அங்கு 66 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இருளில் மூழ்கின. பல வீடுகள் இடிந்தன.
புயல், மழை வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் பெண்கள் 2 பேர் உயிரிழந்தனர். 10 பேர் காணாமல் போயினர். காணாமல் போனவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. போகாங் நகரில் பெரிய உருக்காலை ஒன்றில் தீவிபத்துகள் ஏற்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
66 ஆயிரம் மீன்பிடி படகுகள்
ஆனால் இவை புயலால் நேரிட்டவையா என்பது குறித்து தகவல் இல்லை. 'ஹின்னம்னோர்' புயல் மற்றும் வெள்ளம், நிலச்சரிவால் ஏற்படக்கூடிய சேதங்கள் குறித்து மக்கள் விழிப்பாக இருக்குமாறு அரசு அதிகாரிகள் அறிவுறுத்துள்ளனர்.
ஹின்னம்னோர் புயலால் பெரிதும் சேதம் அடைந்துள்ள பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த புயல் இதுவரை நாம் அனுபவித்திராத வலுவான சூறாவளியாக முடியும் என்று அந்த நாட்டின் பிரதமர் ஹான்டுக் சூ(Hang Tuk Chu) தெரிவித்துள்ளார்.
புயல், மழை காரணமாக 600-க்கும் மேற்பட்ட பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ளன. 250-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் முடங்கின. 66 ஆயிரம் மீன்பிடி படகுகள் துறைமுகங்களுக்கு வெளியேற்றப்பட்டன. மீட்பு, நிவாரண நடவடிக்கைகளை தென்கொரிய அரசு முடுக்கி விட்டுள்ளது.