மைக் பொம்பியோ கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள நாடு
பங்களாதேஷில் அல்-குவைதா பயங்கரவாதக் அமைப்பு இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலாளர் மைக் பொம்பியோ வெளியிட்ட அறிக்கைக்கு பங்களாதேஷ் அரசாங்கம் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது. ஒரு மூத்த தலைவரின் இத்தகைய பொறுப்பற்ற கருத்துக்கள் மிகவும் துரதிர்ஷ்டவசமானவை என்றும், இவை ஏற்றுக்கொள்ள முடியாதவை என பங்களாதேஷ் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், இவ்வாறான ஆதாரமற்ற கருத்துக்களையும் பொய்யையும் பங்களாதேஷ் கடுமையாக நிராகரிக்கிறதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் நேற்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் எங்களது சாதனை உலகளாவிய பாராட்டைப் பெற்றுள்ளது.
பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கான எங்கள் உறுதிப்பாட்டுக்கு ஏற்ப, நாங்கள் பதினான்கு சர்வதேச பயங்கரவாத எதிர்ப்பு மாநாடுகளில் ஒரு அங்கத்தவராகிவிட்டோம். பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கான சர்வதேச தடுப்பு முயற்சிகளுடன் இணைந்து தீவிரமாக செயற்படுகிறோம்” என பங்களாதேஷ் குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்க வெளியுறவுத்துறையின் இணையதளத்தில் அண்மையில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில் மைக் பொம்பியோ சில நாடுகளை பயங்கரவாத மையங்கள் எனக் குறிப்பிட்டிருந்தார்.
அதில், ஈரானை அல்-குவைதாவின் புதிய வீட்டுத் தளம் என தெரிவித்திருந்த நிலையில், இதங்கு ஈரான் கடும் கண்டனத்தைத் தெரிவித்திருந்தது.
அத்துடன், லிபியா, யேமன் மற்றும் மாக்ரெப் போன்ற நாடுகளிலும் அல்-குவைதாவின் ஆதிக்கம் இருப்பதாக தெரிவித்த பொம்பியோ, பங்களாதேஷிலும் அல்-குவைதா இருப்பதாக குறிப்பிட்டிருந்த நிலையில் பங்களாதேஷ் தரப்பிலிருந்து கடுமையான கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.