பங்களாதேஷில் மீண்டும் பதற்றம் ; ஜனாதிபதியைப் பதவி விலகக்கோரி மாணவர்கள் போராட்டம்
பங்களாதேஷ் அரசாங்கத்தின் பணி ஒதுக்கீடு முறைமைக்கு எதிராக மாணவர்களால் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதை அடுத்து பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு, அவர் நாட்டை விட்டு வெளியேறி இருந்தார்.
பங்களாதேஷில் இருந்து இந்தியாவுக்கு அவர் தப்பிச் செல்லும் முன், தனது பிரதமர் பதவியை ஷேக் ஹசீனா இராஜினாமா செய்ததாகத் தகவல் வெளியானது.
ஆனால், ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை இராஜினாமா செய்ததற்கான ஆவணங்கள் தன்னிடம் இல்லை என பங்களாதேஷ் ஜனாதிபதி முகமது ஷஹாபுதீன், கடந்த வாரம் பேட்டி ஒன்றில் கூறியதையடுத்து பங்களாதேஷ் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அவரின் கருத்தால் கொந்தளித்த மாணவர் அமைப்பினர், நேற்று முன்தினம் (22) முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜனாதிபதி மாளிகையை மாணவர்கள் முற்றுகையிட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
போராட்டம் நடத்திய மாணவர் அமைப்பினர் மீது இராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் காயமடைந்தனர்.
அதன் பின்னர், பெரும் போராட்டத்துக்குப் பிறகு அங்கு நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது.
இருப்பினும், முகமது ஷஹாபுதீளை ஜனாதிபதி பதவியிலிருந்து விலகுமாறு மாணவர் அமைப்பினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.