அமெரிக்காவில் நண்பரை கொன்ற சுப்ரமணியம் வேதம் நாடு கடத்தப்படுவாரா?
அமெரிக்காவில் கொலை குற்றச்சாட்டில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத் தண்டனை அனுபவித்த இந்திய வம்சாவளியை சேர்ந்த சுப்ரமணியம் வேதம் என்பவரை நாடு கடத்துவதை தற்காலிகமாக நிறுத்துமாறு அமெரிக்காவின் இரண்டு நீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ளன.
அண்மையில் அவர் மீதான கொலைக் குற்றச்சாட்டு ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, அவர் விடுதலை செய்யப்பட்டார்.

நாடு கடத்தல் தடுப்பு காவல்
ஒன்பது மாத குழந்தையாக அமெரிக்காவுக்கு வந்த வேதம், 1983ஆம் ஆண்டில் நண்பரை கொன்றதாக குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, பரோல் இல்லாத ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டார்.
தற்போது குற்றம் நீக்கப்பட்ட போதிலும், அவர் லூசியானாவில் உள்ள நாடு கடத்தல் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
குடியேற்ற மேல்முறையீட்டு வாரியம் வழக்கை மறுபரிசீலனை செய்யும் வரை நாடு கடத்தலை நிறுத்தி வைக்க ஒரு குடியேற்ற நீதிபதியும், பென்சில்வேனியா மாவட்ட நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளன. எனினும் இந்த மறுபரிசீலனைக்கு சில மாதங்கள் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது